

மகளை இழந்து வாடிய தந்தையிடம், அது தொடர்பான துயரத்தை நினைவுகூர்ந்ததற்காக, அவரிடமே நேரடியாக மன்னிப்புக் கோரியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
பயனாளிகளைக் கவர்வதற்காக அடிக்கடி தனது அமைப்புகளிலும், டைம்லைனிலும் மாற்றங்களைக் கொண்டு வருவது ஃபேஸ்புக்கின் வழக்கம். லுக்பேக் வீடியோ, தேங்க்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக், டிசம்பர் மாத இறுதியில் 'இயர் இன் ரிவியூ' என்னும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளின் ஒரு வருட தொகுப்பை பகிர்வதற்கு வழிவகுத்தது.
2014ஆம் ஆண்டின் இனிய துவக்கங்கள், சந்தோஷமான தருணங்கள், குடும்பத்துடனான புகைப்படங்கள், நீண்ட பயணங்கள் என எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடப்படும் இந்தத் தொகுப்பு வெகு சீக்கிரத்தில் பிரபலமானது.
தினமும் சராசரியாக 864 மில்லியன் பயனர்கள் உலவும் ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் தங்களின் இயர் இன் ரிவியூவைப் பகிர்ந்திருந்தனர்.
எல்லோரையும் போல தனது தொகுப்பையும் பகிர எண்ணியிருந்த எரிக் மேயரின் டைம்லைனில் வந்தது, மூளைப் புற்றுநோயால் இறந்துபோன தன் செல்ல மகள் ரெபேக்காவின் படங்கள்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எரிக் மேயர் தனது டைம்லைனில் இயர் இன் ரிவியூ குறித்த தேவையில்லாத விளம்பரங்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், அதில் தனது நோய்வாய்ப்பட்ட மகளின் படங்கள் வந்து தன்னைக் கஷ்டப்படுத்துவதாகவும் பதிவிட்டிருந்தார்.
கவனமில்லாத கொடூரமான வழிமுறைகள் மூலம் ஃபேஸ்புக் தன்னைக் காயப்படுத்தி விட்டதாகக் கூறிய எரிக், இதுவொரு மிகச் சிறந்த ஆண்டு' என்று வந்த அந்தத் தொகுப்பு, ரெபேக்காவின் சோகமான மரணத்தின் வலியை அதிகப்படுத்துவதாகவும் எழுதியிருந்தார்.
பிரியமானவர்களை இழந்த வலியுடன் வாழ்பவர்கள், நிறைய நாட்களை மருத்துவமனையிலேயே கழித்தவர்கள், விவாகரத்தானவர்கள், வேலையை இழந்தவர்கள் இன்னும் பல மோசமான நிகழ்வுகளை எதிர்கொண்டவர்கள் இந்த ஆண்டை நினைவுகூர விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
இது உலகம் முழுக்கவுள்ள மற்ற பயனாளிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் ஃபேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
"இயர் இன் ரிவியூ யோசனை எல்லோருக்கும் சிறப்பாக இருந்திருக்கவில்லை; இந்த ஆண்டைக் கொண்டாட முடியாதவர்களுக்கு உண்மையிலேயே இது வருத்தத்தைத் தருகிறது" என்று கூறியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் ஜோனத்தான் கெல்லர்.
எரிக் மேயருக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக துன்பத்தையே கொடுத்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
நிறைய பயனாளிகள், தவிர்க்கவே முடியாத தொடர்ச்சியான விளம்பரங்களையும், நினைவூட்டல்களையும் ஃபேஸ்புக் தந்துகொண்டே இருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.