

இரட்டை சிம் ஸ்மார்ட் போன் இப்போது சாதாரணமாகிவிட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான போன்களில் முன்பக்க காமிரா பின்பக்க காமிரா என காமிராவும் இரட்டையாகத் தான் இருக்கிறது. ஆனால் இரட்டைத் திரை என்பது கொஞ்சம் புதுசு இல்லையா? யோட்டா ஸ்மார்ட் போன் (Yotaphone) தான் இப்படி இரட்டைத் திரையுடன் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதன் முன்பக்கம் வழக்கமான டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். பின்பக்கத்தைத் திருப்பினால் அங்கும் ஒரு திரை இருக்கும். இந்த டிஸ்பிளே இ-இங்க் நுட்பத்தில் செயல்படக்கூடியது. மின்நூல்களை வாசிக்க இது மிகவும் ஏற்றது. நோட்டிபிகேஷன் பெறலாம். இமெயில் மற்றும் மெசேஜுகளுக்குப் பதிலளிக்கப் பயன்படுத்தலாம். விரும்பிய வால்பேப்பரையும் வைத்துக்கொள்ளலாம். பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க இந்த நுட்பம் உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்பக்கத் திரை வண்ணமயமாக இல்லாவிட்டாலும் எப்போதுமே விழித்திருக்கும் என்கிறது யோட்டா. முன் பக்கத்தில் உள்ளவற்றைப் பின் பக்கத்துக்குக் கொண்டுசெல்லும் வசதியும் இருக்கிறது. முன்பக்கத் திரையில் காமிராவை கிளிக் செய்தால் பின்பக்கத் திரையில் ஸ்மைல் ப்ளீஸ் என்று வருவது சுவாரஸ்யம்.
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான போன்தான். விலை ரூ. 23,499. இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் அறிமுகமானது. சமீபத்தில் ஐரோப்பியச் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு:> http://yotaphone.com/in-en/