

இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்க இணையதளங்களைத் திரும்பிப் பார்ப்பதைவிடச் சிறந்த வழி வேறில்லை. குறிப்பிட்ட கால கட்டத்தில் இணையதளங்கள் எப்படித் தோற்றம் அளித்தன எனத் தெரிந்துகொள்ள முடிவது இணைய வடிவமைப்பு பற்றி மட்டுமல்ல, உள்ளடக்கத்தின் போக்கு பற்றியும் புரிய வைக்கும்.
அந்த வகையில், இணையத்தின் முன்னணி இணையதளங்கள் பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள வழி செய்கிறது டென் இயர்ஸ் அகோ இணையதளம்.
இதன் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரெட்டிட், யூடியூப், அமேசான், பிபிசி, டைம், ஆப்பிள் உள்ளிட்ட இணையதளங்களின் லோகோ மீது கிளிக் செய்தால் அவை 10 ஆண்டுகளுக்கு முன் எப்படிக் காட்சி அளித்தன என்பதைப் பார்க்கலாம்.
இணையதளங்களின் பழைய வடிவங்களைச் சேமித்துக் காப்பாற்றிவரும், வெப் ஆர்கேவ் தளத்தில் சேமிக்கப்பட்ட இணைய பக்கங்களைக் கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீல் அகர்வால் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார்.
இணைய முகவரி: http://tenyearsago.io/