Published : 04 Aug 2017 11:56 am

Updated : 04 Aug 2017 11:56 am

 

Published : 04 Aug 2017 11:56 AM
Last Updated : 04 Aug 2017 11:56 AM

ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா?

 


ணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஃபிளாஷ் அடிப்படையில் இணையத்துக்கான மல்டிமீடியா சேவைகளை உருவாக்கப் பயன்படும் மென்பொருள். அனிமேஷன், வீடியோ கேம், வீடியோக்களை உருவாக்க ஃபிளாஷ் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தில் வீடியோக்களை எளிதாகப் பார்க்கவும் ஃபிளாஷ் கைகொடுத்தது.

வீடியோ பகிர்வு சேவைப் பிரிவில் முன்னோடியான யூடியூப் 2005-ல் அறிமுகமானபோது ஃபிளாஷ் பிளேயர் மூலமே வீடியோக்களைப் பார்க்க வழிசெய்ததாக விக்கிபீடியா கட்டுரை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்ல; ஃபிளாஷ் கொண்டு எண்ணற்ற விளையாட்டுகளும் அனிமேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படி கோலோச்சிய ஃபிளாஷ் மூடுவிழாவை நோக்கித் தள்ளப்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், ஃபிளாஷ் தொழில்நுட்பம் காலாவதியாகிவிட்டது என்பது. பிரவுசர்களில் பயன்படுத்தப்படும் எச்.டி.எம்.எல். தொழில்நுட்பத்துக்கு ஃபிளாஷ் அந்நியமாகிவிட்டது. எனவேதான் ஃபிளாஷுக்கு மென்பொருளாளர்கள் குட்பை சொல்லி வருகின்றனர்.

இன்னொரு பிரச்சினை, அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள். ஃபிளாஷ் மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் பல சேவைகள் ‘மால்வேர்’ எனப்படும் வில்லங்க வாகனங்கள் மறைந்திருக்கும் இடமாகக் கருதப்படுகின்றன. இதற்கு பிளேஷைக் குற்றம் சாட்ட முடியாது என்றாலும், மால்வேரை உருவாக்கும் விஷமிகளின் பயன்பாட்டால் ஃபிளாஷ் பாதுகாப்பு ஓட்டைகள் நிரம்பியதாகக் கருதப்பட்டுவருகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம் வந்துவிட்டதாலும், மால்வேர் வாகனமாக இருப்பதாலும் ஃபிளாஷுக்கு எதிராக வலுவான விமர்சனங்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. பல பிரவுசர் நிறுவனங்களும் ஃபிளாஷைக் கழற்றிவிட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோனில் இதற்கு இடமே கொடுக்கவில்லை. ஃபிளாஷ் மறைந்தாக வேண்டிய மென்பொருள் என முதலில் அறிவித்தது ஜாப்ஸ்தான். ஃபிளாஷ் டெஸ்க்டாப் காலத்துக்கான மென்பொருள், ஸ்மார்ட்போன் யுகத்தில் அது தேவையில்லை என ஜாப்ஸ் காட்டமாகக் கூறியிருந்தார்.

ஏதோ ஒரு விதத்தில் பலரும் இப்போது இதை ஏற்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவுதான் அடோப் நிறுவனம், பிளேஷைக் கைவிடும் முடிவை அறிவித்துள்ளது:

https://blogs.adobe.com/conversations/2017/07/adobe-flash-update.html

இந்தச் செய்திக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. ஃபிளாஷ் மென்பொருளுக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதும், அவர்களில் பலர் ஃபிளாஷ் நீடுழி வாழ வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பியிருப்பதும்தான் அது. மென்பொருளாலரான ஜுஹா லின்ஸ்டெட் (Juha Lindstedt) என்பவர் ஃபிளாஷைக் கைவிடக் கூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

லின்ஸ்டெட் ஃபிளாஷைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் வாதம் மிகவும் முக்கியமானது. ஃபிளாஷுக்கு மூடுவிழா என்பது ஒரு மென்பொருள் சார்ந்த முடிவு மட்டுமல்ல; அது இணைய வரலாறு சார்ந்ததும்கூட என்பதுதான் அவரது வாதம். அதாவது ஃபிளாஷ் கொண்டு உருவாக்கப்பட்ட இணையசேவைகளும் கேம்களும் அனிமேஷன்களும் தொடர்ந்து பயன்படுத்தப்பட முடியாமல் போய்விடும் என்று அவர் கவலைப்படுகிறார். இந்தச் சேவைகளும் கேம்களும் இணைய வரலாற்றின் அங்கமாக இருப்பதால், அவை காணாமல் போவது இணைய வரலாற்றின் ஒரு பகுதி அழிந்துபோவதற்குச் சமம் என்கிறார் அவர்.

மென்பொருளில் ஏற்படும் முன்னேற்றம் என்பது கடந்த காலத்தை அழிப்பதாக அமைய வேண்டுமா என்பதுதான் அவர் கேட்கும் கேள்வி. ஆம், சில ஆண்டுகள் கழித்து மென்பொருள் வரலாறு பற்றி விவாதிக்கும்போது ஃபிளாஷ் மென்பொருள் தொடர்பாகப் பேசும்போது, அதற்கான உதாரணங்களை காண முடியாமல் வெறும் விக்கிபீடியா கட்டுரைத் தகவலை மட்டும் காண்பது என்பது வரலாற்று வெறுமையாகிவிடலாம் அல்லவா? இந்தக் கவலையால்தான் லின்ஸ்டெட் ஃபிளாஷைக் காப்பாற்றக் குரல் கொடுக்கக் கோரியிருக்கிறார்.

ஆனால், ஃபிளாஷ் தொடர்பான நிதர்சனத்தை அவர் உணராமல் இல்லை. எனவேதான், ஃபிளாஷ் மென்பொருளைக் கொலை செய்துவிடாமல், அதை ஓபன் சோர்ஸ் முறையில் வெளியிட்டு இணையவாசிகள் கைகளில் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். இது சரியா? பலன் தருமா? எனும் நோக்கில் மென்பொருள் உலகில் விவாதம் நடைபெற்று வருகிறது.: https://github.com/pakastin/open-source-flash

இணைய யுகத்தின் பழைய சேவைகளையும் தளங்களையும் தக்கவைத்து, இணைய வரலாற்றைக் காக்க வேண்டும் எனும் இயக்கத்தின் பாதையில் ஃபிளாஷுக்கான போராட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தச் செய்திக்கு வாலாக ஒரு தகவலையும் நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வரைவதற்கான எம்.எஸ். பெயிண்ட் மென்பொருளுக்கு விடை கொடுப்பதாக அறிவித்தது.

ஆனால், அந்த எளிமையான மென்பொருளுக்கு ஆதரவாகப் பயனாளிகள் டிவிட்டரில் பொங்கியதை அடுத்து, பெயிண்ட் மென்பொருள் விண்டோஸ் ஸ்டோரில் தொடரும் என அறிவித்தது. 32 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான மென்பொருளுக்கு இத்தனை அபிமானிகளா என்றும் வியந்து போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. கம்ப்யூட்டரில் வரைவதை எளிதாக்கிய அந்த மென்பொருளும் இணைய வரலாற்றின் அங்கம்தான்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x