

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது முன்னோடி சேவையான பெயின்ட் பயன்பாட்டை நிறுத்த உள்ளதாக திங்கட்கிழமை அன்று அறிவித்துள்ளது.
3-டி வரைபட மென்பொருளில் கவனம் செலுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் இயங்கு பொருளின் அங்கமான பெயின்ட் சேவை 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக விண்டோஸ் கணினிகளில் கட்டாயம் நிறுவப்படும் சேவைகளில் பெயின்ட் ஒன்றாக இருந்தது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், ''பெயின்ட் சேவையை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை. வருங்கால வெளியீடுகளில் பெயின்ட் சேவை நீக்கப்படலாம்'' என்று அறிவித்துள்ளது.
பெயின்ட் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்கள்/ வருபவர்கள் இனி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பெயின்ட் 3-டி சேவையைக் கொண்டே ஆறுதல் அடைந்துகொள்ள முடியும்.