Last Updated : 01 Jul, 2016 12:02 PM

Published : 01 Jul 2016 12:02 PM
Last Updated : 01 Jul 2016 12:02 PM

டிஜிட்டல் வாழ்க்கை மேம்பட சில ஐடியாக்கள்!

பதிவுகள், குறும்பதிவுகள் போல, சில சின்னப் பழக்கங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இதை மைக்ரோ ஹாபிட்ஸ் அல்லது மினி ஹாபிட்ஸ் என்கிறார்கள். அதாவது ஒரு பழக்கத்தின் சிறு பகுதி என்று பொருள். எந்தப் பழக்கத்தைப் பின்பற்ற விரும்புகிறோமோ, அந்தப் பழக்கம் தொடர்பாக ஏதேனும் ஒரு சிறிய செயலை மட்டும் செய்யத் தொடங்கினால் போதும். நாளடைவில் அது பழகிவிடும். பெரும் பாய்ச்சலாக முயல்வதைவிட, இப்படிச் சின்னச் சின்ன அடியாக எடுத்துவைத்துப் பழக்கங்களை வெல்லலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறையைத் தொழில்நுட்ப உலகுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனும் மேக் யூஸ் ஆப் இணையதள கட்டுரை, நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும் குறும் பழக்கங்களைப் பரிந்துரைக்கிறது:

வாரம் ஒரு சேவைக்குப் பாதுகாப்பு

இணையப் பயன்பாடு பரவலாகி இருக்கும் அதே நேரத்தில் அது ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. ஹேக்கிங், பாஸ்வேர்டு திருட்டு, அடையாளத் திருட்டு, ஆன் -லைன் மோசடி, மால்வேர் பாதிப்பு எனப் பல விதங்களில் ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. பேஸ்புக்கில் தொடங்கி, ஜிமெயில், வாட்ஸ் அப் எனப் பெரும்பாலான சேவைகளில் பயனாளிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. வாரம் ஒரு சேவையைத் தேர்வு செய்து அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தும் சேவையில் இருந்து இதைத் தொடங்கலாம்.

இணையப் பயன்பாடு பரவலாகி இருக்கும் அதே நேரத்தில் அது ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. ஹேக்கிங், பாஸ்வேர்டு திருட்டு, அடையாளத் திருட்டு, ஆன் -லைன் மோசடி, மால்வேர் பாதிப்பு எனப் பல விதங்களில் ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. பேஸ்புக்கில் தொடங்கி, ஜிமெயில், வாட்ஸ் அப் எனப் பெரும்பாலான சேவைகளில் பயனாளிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. வாரம் ஒரு சேவையைத் தேர்வு செய்து அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தும் சேவையில் இருந்து இதைத் தொடங்கலாம்.

இதே முறையை பாஸ்வேர்ட் பாதுகாப்புக்கும் பின்பற்றலாம். பரவலாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டைத் தவிர்க்க வேண்டும், ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என பாஸ்வேர்டு தொடர்பான பல விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. வாரம் ஒரு இணைய சேவையாகத் தேர்வு செய்து அதன் பாஸ்வேர்டு பலமாக இருக்கிறதா என சோதித்துப் பார்த்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சுத்தமான டெஸ்க்டாப்

வீட்டைக்கூட சுத்தம் செய்துவிடலாம் ஆனால் டெஸ்க்டாப்பைத் தூய்மையாக்க முடியவில்லை என்று புலம்புகிறீர்களா? இதை ஒரேடியாக சுத்தமாக்க முயன்று தோல்வியைத் தழுவாமல், ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கும்போதும் ஒரு ஐகான் அல்லது கோப்பை டெஸ்க்டாப்பில் இருந்து அகற்றுங்கள்.

உடற்பயிற்சி அவசியம்

நீண்ட நேரம், ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்வது ஆரோக்கிய கேடு. ஆனால் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பே கதி என இருப்பவர்கள் என்ன செய்வது? கவலையே வேண்டாம், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே அவ்வப்போது கை காலை நீட்டி மடக்கி செய்யும் எளிதான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இந்த உடற்பயிற்சிகளை இ- மெயில் பார்க்கும்போது அல்லது பேஸ்புக்கில் நுழையும்போது செய்யுங்கள்.

ஒளிப்படங்கள்

கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் ஒளிப் படங்களாக எடுத்துத் தள்ளுகிறோம். ஓய்வு நேரத்தில் ஒளிப் படங்களை வகைப்படுத்தி அவற்றுக்கெனக் குறிச்சொல் அமைத்து சேமித்துவைக்கலாம்.

மாதம் ஒரு சாதனம்

கம்ப்யூட்டர், மவுஸ், கீபோர்ட் தவிர தேவைக்கேற்ப ரவுட்டர், வை-பை, புளு டூத் ஸ்பிக்கர் போன்ற சாதனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். மாதம் ஒரு சாதனத்தைச் சுத்தம் செய்வது என வைத்துக்கொண்டால் கூட போதும், கம்ப்யூட்டர் மேஜை ஓரளவு சுத்தமாக இருக்கும்.

இ-மெயில் சுமை

செய்திமடல் சேவைகள் பயனுள்ளவைதான். ஆனால் அதிக சேவைகளில் உறுப்பினராகச் சேரும்போது, தொடர்ந்து வரும் மெயில்களைத் திறந்து பார்ப்பதற்கே நேரம் இல்லாமல் போகலாம். தினம் ஒரு செய்திமடல் சேவையைப் பரிசீலித்து, தேவை இல்லை எனில் அதில் இருந்து விலகிவிடலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x