Published : 11 Jan 2014 15:10 pm

Updated : 06 Jun 2017 18:00 pm

 

Published : 11 Jan 2014 03:10 PM
Last Updated : 06 Jun 2017 06:00 PM

கூகுளை நம்பலாமா?

சந்தேகமும் கேள்வியுமே உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகள் தோன்றக் காரணங்கள். முன்பெல்லாம் ஒரு கேள்விக்கு, சந்தேகத்திற்கு விடை தேடி நாட்கணக்காகக் காத்திருக்க வேண்டியதிருந்தது. பல இடங்களுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. இப்போது ஒரு சொடுக்கில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கிறது. சந்தேகங்கள் தெளிவாகின்றன. ஒருவர் பல ஆண்டுகளாக உழைத்துப் பெறும் பட்டறிவை ஒரே ஒரு சொடுக்கில் இப்போது பெற்றுவிடுகிறோம்.

‘இணையம்’ பல்வேறு வகையில் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகியிருக்கிறது. அதுபோல இன்று கல்வி, ஆய்வுத் துறையில் இணையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் ஆய்வு என்றாலே கள ஆய்வுகள்தாம். இருந்த இடத்திலிருந்து ஆய்வுகள் அப்போது சாத்தியம் அல்ல. ஒரு சிறு தகவல் என்றாலும் நாம் அந்த இடத்திற்குச் சென்றுதான் பெற முடியும். குறைந்த பட்சம் தகவல் வேண்டி நூலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். உதாரணமாக யானைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாணவனுக்காகத் தகவல்கள் பலவும் இன்று இணையத்திலேயே கிடைத்துவிடுகின்றன. யானைகளின் வழித் தடங்கள், வலசை போகும் அதன் வாழ்நிலை பற்றியும் ஆழமான பல கட்டுரைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இதனால் ஆய்வு இன்று சுலபமாகியுள்ளது. தகவல்களுக்காகப் பல மைல் தூரம் அலைய வேண்டியதில்லை. கூகுள் போன்ற தேடுதல் பொறிகள் நம் அன்றாடத் தேடுதலுக்கு ஏற்ப இணையத்தில் நமக்கான முடிவுகளை எளிதாக வழங்குகிறது. இன்று உலகம் முழுவதும் கூகுள் தேடு பொறி மேற்படிப்புகளைத் தீர்மானிப்பதில் இருந்து கல்விக்கான பாடங்களை வழங்குவது, இறுதிப் படிப்பு ஆய்வுகள் முடிப்பது எனப் பல்வேறுவிதமாகப் பயன்பட்டுவருகிறது. மதுரை சமூகவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமி இன்றைக்கு ஆய்வுக்காக இணையம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.

கூகுள் ஆய்வுகள்

2008இல் வெளிவந்த அறிக்கையின்படி கல்வி தொடர்பான தேடுதலுக்காக 79 லட்சம் பேர் கூகுள் தேடுதல் பொறியைப் பயன்படுத்துகிறார்கள். உலக அளவிலும் இந்தப் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. Pew Research Centre என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 94 சதவீதமான மாணவர்கள் தங்கள் ஆய்வுக்காக கூகுளைப் பயன்படுத்துகிறார் எனத் தெரியவந்துள்ளது. ஆய்வுக்காகப் புத்தகங்கள், களவு ஆய்வு போன்ற பாரம்பர்யமான ஆய்வுகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில் கூகுள் பலவகையான ஆய்வுக்கு ஆதாரமாக இருப்பது தெளிவு. ஆனால் கூகுள் தேடு பொறிகளை நம்பியே ஆய்வு மேற்கொள்ளப்படுவது சமீபகாலமாகப் பெறுகி இருக்கிறது. இது மேற்கண்ட ஆய்வில் தெளிவாகிறது. அதுபோல ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகள் முடிவுகளை, கூகுள் வழியாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிலர் தங்கள் ஆய்வுகளை ‘டெஸ்க் ஒர்க்’ ஆக நிறைவுசெய்வதும் உண்டு. இந்த இடத்தில்தான் கூகுள் இணையத் தேடல் ஒரு அபாயகரமான விஷயமாகிறது.

“ஆய்வுகளுக்காக கூகுள் தேடல்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம்தான். முன்பு உங்களுக்குத் தேவையான விஷயத்தைத் தேட நீங்கள் அந்தப் புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருக்கும். கூகுள் தேடலில் நமக்கு வேண்டிய சொல்லை எழுதிச் சொடுக்கினால் தேடல் முடிவுகள் வந்து விடுகின்றன. ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால் கூகுள் தேடல் முடிவுகள் அனைத்தையும் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது. புத்தகப் பிரதிகளிலும் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது உண்டு. ஆனால் இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தால் இங்கு நிறைய தகவல்கள் ஆதாரமில்லாமல் பகிரப் படுகின்றன. முழுக்க இணையத்தை நம்பி இருந்தால் இது போன்ற ஆபத்துகள் நிகழும். சரியான தகவல்களை அடைய தேடுவருக்கு அந்தத் துறை பற்றிய அடிப்படையான அறிவு இருக்க வேண்டியது அவசியம். அப்படியானவர்களுக்குத்தான் கூகுள் தேடல் உபயோகமாக இருக்கும்” என்கிறார் பேராசிரியர் ரெங்கசாமி.

ஆதாரமில்லாத தகவல்கள்

கூகுள் தேடல் அடிப்படையில் ஒரு தெளிவை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியாது. கூகுள் தேடுதல் பொறியில் தரப்படும் முடிவுகள், எவ்விதமான தணிக்கையும் செய்யப்படாதவை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பெயரை ‘தேசிய’ விநாயகம் பிள்ளை என்று தேடினாலும் கூகுள் தேடல் முடிவுகளை அளிக்கிறது. இதுபோன்று இடங்களின் பெயர்கள், சில வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், தலைவர்களின் பொன்மொழிகள் ஆகியவை பெரும் பிழைகளுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்கு எந்த வரையறைகளும் இல்லை. கூகுள் ப்ளாக் சேவையைப் பயன்படுத்திப் பலர் எழுத வந்தனர். அது ஒரு சாதகமான அம்சம். ஆனால் அவர்கள் செவிவழிச் செய்திகளை அடிப்படை ஆதாரமின்றிப் பகிரத் தொடங்கினர். உதாரணமாக மகாத்மா காந்தி தொடர்பாகப் பல்வேறு விதமான கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவை புராணக் கதைத் தன்மையிலான கதைகள். அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இருக்காது. இதன் அடிப்படையில் ஒரு மாணவன் காந்தியின் வரலாற்றை ஆராய்ந்தால் அது மோசமான வரலாற்றை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.

இணைய இதழ் நடத்திய அனுபவம் உள்ளவரும் கிழக்கு பதிப்பாளருமான பத்ரி, கூகுள் தேடல் பயன்படக்கூடியது என்றாலும் அது குறித்த புரிதல் இருந்தால்தான் அதைப் பயன்படுத்துவது சாத்தியமாகும் என்கிறார், “நான் நேரு சொன்னதாக ஒரு தவறான மேற்கோளை என்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் பதிவுசெய்தால், பத்ரி குறிப்பிட்டார் சரியாகத்தான் இருக்கும் என நினைத்து அதை மேற்கோள் காட்டக் கூடாது. அதன் மூல ஆதாரத்தைத் தேடி அதிலிருந்துதான் மேற்கோள் காட்ட வேண்டும்”

தேடுதல் என்ற சொல்லுக்கான மாற்றாகவே கூகிளிங் என்னும் சொல் பழங்கத் தொடங்கிவிட்டது. என்ன ஆடை வாங்கலாம்? என்ன படிக்கலாம்? சமையல் செய்வது எப்படி? இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன? இது போன்ற அன்றாடத் தேவைகளுக்காக கூகுள் பயன்படத் தொடங்கி யுள்ளது. ஆனால் கல்வி, ஆய்வு இவற்றுக்காகப் பயன்படுத்தும்போது கூடுதல் விழிப் புணர்வு அவசியம் ஆகிறது. கூகுள் என்பது நம் தேடலுக்கான முடிவு அல்ல. அது ஓர் ஆரம்பம் மட்டுமே.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கூகுள்கல்விநம்பகத் தன்மைகூகுள் தேடல்கூகிளிங்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author