

இது செல்ஃபி யுகம். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலரிடம் சுயபடம் எடுத்து வெளியிடும் பழக்கம் இருக்கிறது. எந்த நிகழ்வையும் சுயபடம் எடுக்கும் பழக்கம் நல்லதா, கெட்டதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். சுயபட பழக்கம் பணியிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் சுயபடம் எடுப்பது, நார்சிஸம் எனப்படும் சுய ரசிப்பின் அடையாளமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்ல, சுயபடம் எடுப்பது ஒருவரது சுய கட்டுப்பாடின்மையையும் குறிக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒருவரது வேலைவாய்ப்பையும் பாதிக்கலாம். வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் பலர், சமூக ஊடகங்களில் ஆய்வு செய்வதாகவும் அப்போது அதிக சுயபடம் வெளியிட்டவர்களை நிராகரிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
சுயவெளிப்பாட்டில் இத்தனை ஆர்வம் கொண்டவர்கள் ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயல்படும் தன்மை குறைவாகப் பெற்றிருப்பார்கள் என்று வல்லுநர்கள் விளக்கம் தருகின்றனர். ஆக, செல்ஃபி பிரியர்கள் கொஞ்சம் யோசித்து படம் எடுப்பது நல்லது.