

ஃபேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச்சுட செய்திகளை தெரிந்துகொள்வதற்காக வருவதில்லை. இருந்தாலும், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, ஃபேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை ஃபேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 4% பேர் மட்டுமே ஃபேஸ்புக், செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஃபேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர் பொழுதுபோக்கு செய்திகள்தான் மிகவும் பிரபலமடைவதாக தெரிவித்துள்ளனர்.
செய்திக்காக ஃபேஸ்புக்கை சொடுக்கும் நபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு குறைவானவர்கள். அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் வழக்கமான செய்திகள் பக்கம் தலை காட்டுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.
இது குறித்து பியூ ஆரய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏமி மிட்செல் கூறுகையில், “செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான அனுகுமுறையை முன்னிலைப்படுத்துகிறது.
இந்த ஆராய்ச்சிக்காக 5,173 பேரிடம் கருத்துக்களைப் பெற்றபோது, நாம் செய்தியை மெனக்கிட்டு தேடாதபோதும் நாம் செய்தியை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் சிறந்தத் தளம் என ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஃபேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கனிசமான அளவில் செய்திகளை பகிரும் செய்தி நிறுவனங்களின் இணையதளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் வட்டம் அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த மாதிரியான செய்திகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், மேலோட்டமாக செய்திகள் தங்களது ஃபேஸ்புக் முகப்புப் பக்கத்தில் வந்து சேர்வதை அனைவரும் விரும்புவதாகவே ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.