Last Updated : 14 Apr, 2017 12:30 PM

 

Published : 14 Apr 2017 12:30 PM
Last Updated : 14 Apr 2017 12:30 PM

இளமை .நெட்: உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது!

நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல. ஒருவரது ஃபேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப் பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

நட்பு வளையம்

ஃபேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள்தானே நாம் பகிரும் தகவல்களைப் பார்க்க முடியும்? அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் ஃபேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தத் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள். யாரோ ஒரு ஃபேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் ஃபேஸ்புக் முகவரி மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் ஃபேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்தத் தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருந்தால், அந்தத் தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என்று பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், காணொலிகள், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் ‘டேக்’ செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம். அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்தப் படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் ‘லைக்’ செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டம் அளித்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார், எந்தக் குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

ஃபேஸ்புக் தேடல்

ஃபேஸ்புக் உறுப்பினர் முகவரியைச் சமர்ப்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாகத் திரட்டப்பட்ட தகவல்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக்காட்டுகிறது. ஒவ்வொரு வகையாகத் தேர்வு செய்து ஆய்வு செய்து பார்க்கலாம்.

பொதுவாக ஃபேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன்தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்துகொள்கிறோம். விவாதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், ஃபேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்குப் பொதுவெளியில் சிதறிக் கிடக்கின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. இதைத்தான் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையச் சேவை அம்பலப்படுத்துகிறது. ஃபேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், இந்தத் தளம் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. ஃபேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காணக் கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது, அவ்வளவே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த அடையாளம் காட்டுதலையும் ஃபேஸ்புக் வழங்கும் தேடல் வசதி கொண்டே சாத்தியமாக்குகிறது.

அதாவது இந்தத் தேடலுக்கு இந்தத் தளம் கண்டிப்பாகத் தேவை என்றில்லை. 2013-ம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகம் செய்த‌ ‘கிராஃப் சர்ச்’ தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களைத் தேட முடியும். அப்படித் தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

நல்லெண்ண ஹேக்க‌ர்

ஃபேஸ்புக் பயன்பாட்டின் தனியுரிமை அம்சம் தொடர்பான‌ விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தளம் முயற்சிக்கிறது. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஆன்தி த க்யூக்லேர் எனும் நல்லெண்ண ஹேக்க‌ர் இந்தச் சேவையை உருவாக்கியிருக்கிறார். கிராஃப் சர்ச் தேடலின் வீச்சும், பிரச்சினையும் பரவலாக அறியப்படாமல் இருப்பதால், சாதாரண இணையவாசிகளும் இதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தச் சேவையை உருவாக்கியதாக ‘மதர்போர்ட்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான சாமானியர்களுக்குத் தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிந்துணர்வு இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘யூஸர் ஃப்ரெண்ட்லி’யாக‌ இந்தச் சேவையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராஃப் சர்ச் அறிமுகமானபோது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காகப் பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் ஃபேஸ்புக் இந்தத் தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராஃப் சர்ச் தேடலைப் பயன்படுத்தி, தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதைத்தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தச் சேவை ஃபேஸ்புக்கின் தனியுரிமைக் கொள்கையை மீறவில்லை என்றும், பொதுவெளியில் பார்க்கக்கூடிய, ஆனால் மறைந்திருக்கும் தகவல்களை மட்டுமே காட்டுவதாகவும் தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, ஃபேஸ்புக் பயனாளி, தான் பகிரும் தகவல்களை நண்பர்கள் பார்வைக்கு மட்டும் என அமைத்திருந்தார் என்றால், அதற்குள் யாரும் எட்டிப் பார்க்க முடியாது. ஆனால் எப்படிப் பகிர்ந்துகொள்கிறோம் என அறியாமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்களின் தகவலை எல்லோரும் பார்க்க முடியும்.

நீங்களும் உஷார்

நீங்களும்கூட இந்தத் தளத்தில் உங்கள் ஃபேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் ஃபேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்குக் கடை பரப்பி வைக்கப்படுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதிகத் தகவல்கள் இல்லை எனில், நீங்கள் தனியுரிமை அமைப்பை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள் எனத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களைத் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கான தனியுரிமைப் பாதுகாப்பு போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும்போது அல்லது பின்னூட்டம் அளிக்கும்போதும்கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது. இதற்கான இணைய

முகவரி: https://www.facebook.com/help/443357099140264 இணையதள முகவரி: https://www.stalkscan.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x