Published : 30 Jun 2017 11:58 am

Updated : 30 Jun 2017 11:58 am

 

Published : 30 Jun 2017 11:58 AM
Last Updated : 30 Jun 2017 11:58 AM

கூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறு!

நவீனப் போக்கு மட்டும்தானா ஃபேஷன் என்பது? அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்கிறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப் பினைந்திருக்கின்றன. காலம் சொல்லும் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்படி ஃபேஷன் சொல்லும் கடந்த காலக் கதைகளையும், அவற்றின் கலாச்சாரக் கூறுகளையும் கூகுளின் சமீபத்திய இணையத் திட்டம் விரல் நுனியில் அறிய வழிசெய்துள்ளது.

கலாச்சாரத்தை நாம் அணிகிறோம் எனும் தலைப்பில் கூகுள் செயல்படுத்தியிருக்கும் இந்த இணையத் திட்டம் வாயிலாக 30,000 ஒளிப்படங்களின் மூலம் 3,000 ஆண்டு கால ஃபேஷன் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம். பழங்காலப் பட்டுப் பாதையில் தொடங்கி ஃபேஷன் தலை நகரான இத்தாலியின் மிலன் நகரில் உருவான நவீன ஆடை ரகங்கள் வரை ஃபேஷனின் பல முகங்களையும் ரகங்களையும் கண்டு ரசிக்கலாம்.


கூகுள் முதன்மையாகத் தேடல் சேவை வழங்கும் நிறுவனமாக அறியப்பட்டாலும், தேடல் தவிர எண்ணற்ற துணைச் சேவைகளையும் உப வசதிகளையும் கூகுள் வழங்கிவருகிறது. பரவலாக அறியப்பட்ட கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் வரைபட சேவை, கூகுள் எர்த், ஜிமெயில், ஸ்டிரீட்வியூ போன்றவை தவிரவும் கூகுளின் துணைச் சேவைகள் பெரிதாக நீள்கின்றன. இவற்றில் ‘கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர்’ எனப்படும் கூகுள் கலை மற்றும் கலாச்சாரக் கழகத் திட்டமும் ஒன்று.

உலகின் கலை மற்றும் கலாச்சாரப் பொக்கிஷங்களை டிஜிட்டல்மயமாக்கிக் கண்காட்சியாகும் சேவையாக இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், கலாச்சாரக் கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து கூகுள் இந்த இணையத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

இதற்கான இணையதளத்தில் நுழைந்து உலா வந்தால், உலகம் முழுவதும் ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டது போன்ற உணர்வைப் பெறலாம். அருமையான ஓவியங்கள் முதல் தெரு ஓவியங்கள் வரை பலவிதமான கலை வெளிப்பாட்டை இதில் காணலாம். ( >https://www.google.com/culturalinstitute/beta) இது ஒரு உதாரணம்தான். மேலும் பல கலை அற்புதங்களை இந்தத் தளத்தில் அணுகலாம்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகதான் இப்போது ஃபேஷன் வரலாற்றுக் காட்சிகள், வி வியர் ஃபேஷன் எனும் தலைப்பில் தனிக் கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட கலை அமைப்புகளுடன் கைகோத்து இந்த இணையக் கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகால வரலாற்றை ஆடை அலங்காரம் மூலம் திரும்பிப் பார்க்கவும், புதிய புரிதலைப் பெறவும் இந்தக் கண்காட்சி வழிசெய்கிறது.

அருங்காட்சியகத்தில் அரிய பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் ஆடை ரகங்களை டிஜிட்டல்மயமாக்கிக் காட்சிப்படுத்தியிருப்பதுடன், அவற்றுடனான வரலாற்றுக் கதைகள், கலாச்சார அம்சங்களையும் இதில் இடம்பெற வைத்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் இந்திய ஃபேஷன் வரலாறும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டின் மிகவும் பழமையான அருங்காட்சியகமான கொல்கத்தா அருகங்காட்சியகத்தில் உள்ள ஃபேஷன் தொடர்பான கலைப் பொருட்கள், மும்பை சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் உள்ள கலைப் பொருட்களை ஒளிப்படங்களாக இந்தத் தளத்தில் பார்க்கலாம். இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படும் சேலைகளின் வரலாற்றையும் அவை தொடர்பான அரிய தகவல்களையும் இவை தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா பெண்களின் சேலை நுணுக்கங்களில் தொடங்கி உலகம் போற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் கலை வேலைப் பாடுவரை அரிய தகவல்கள் ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

வட கிழக்கு மாநிலங்களின் ஆடை வரலாற்றை உணர்த்தும் படைப்புகளும் சுவாரசியத்தை அளிக்கின்றன. நாகா இனப் பெண்களால் அணியப்பட்ட சேலைகள், காலத்தின் கதைகளை விளக்கும் சித்திரங்களையும் கொண்டிருப்பதைப் பார்த்து வியக்க முடிகிறது. குஜராத்தில் உள்ள சல்வி சமூகத்தினரால் அணியப்படும் பட்டோலா சேலைகள் அவற்றின் நேர்த்தியான வேலைப்பாட்டை உணர்த்துவதோடு அப்பகுதியின் நெசவு வரலாற்றையும் புரியவைக்கின்றன.

இந்தத் திட்டம் தொடர்பான கூகுள் வலைப்பதிவு நாம் அணியும் சேலைகள் மற்றும் ஜீன்ஸ்கள் பல கதைகளைச் சொல்வதாகவும், அவை பல நூற்றாண்டுகளின் சரடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்தக் கதைகளை உலகின் பார்வைக்கு வைக்கும் வகையில் இந்த இணையக் கண்காட்சியைக் கூகுள் உருவாக்கியுள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் ஃபேஷன் தொடர்பான குறிச்சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததையடுத்து ஃபேஷன் வரலாற்றை இணையக் கண்காட்சியாக்கத் தீர்மானித்திருக்கிறார்கள்.

ஓர் ஓவியத்தை அணு அணுவாக ரசிப்பதுபோல, இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு பகுதியாக நுணுக்கமாக ரசிக்கலாம். ஃபேஷன் படைப்புகளின் பின்னே உள்ள கதைகள், ஃபேஷனுடன் பின்னிப்பினைந்திருக்கும் கலை அம்சங்கள் என எல்லாம் தனித்தனித் தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் கிளிக் செய்து அழகிய ஒளிப்படங்களைப் பார்த்தபடி ஃபேஷன் வரலாற்றில் திளைக்கலாம்.

மகத்தான ஃபேஷனை உருவாக்கிய வடிவமைப்பாளர்கள், நவீனப் போக்குகளை உருவாக்கிய ஃபேஷன் கலைஞர்கள் பற்றியும் விரிவாக உள்ளது. ஃபேஷன் உலகில் நட்சத்திரமாகக் கருதப்படும் கோகோ சேனல், ஹாலிவுட் நட்சத்திரம் மர்லின் மன்ரோவுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகக் காலணி எனப் பலவற்றை இதில் காணலாம்.

வரலாற்றில் ஃபேஷன் செலுத்திய தாக்கத்தை விளக்கும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆடை ரகங்களை உருவாக்குவது தொடர்பான நெசவுக்கலை உள்ளிட்ட நுட்பங்களை விளக்கும் பகுதிகளும் இருக்கின்றன. ஃபேஷன் பிரியர்கள் இந்தத் தளத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் கிளிக் செய்தபடி உலா வந்து கொண்டிருக்கலாம்.

இந்தப் படைப்புகள் உருவான விதம் பற்றிய 360 கோணத்திலான விளக்கத்தைப் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்.

பேஷன் கண்காட்சியைக் காண: >goo.gl/fx5Z4j


கூகுள் சொல்லும் ஃபேஷன் வரலாறுஓவியம்நவீனப் போக்குகுஜராத்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x