Last Updated : 05 Aug, 2016 12:15 PM

 

Published : 05 Aug 2016 12:15 PM
Last Updated : 05 Aug 2016 12:15 PM

இப்படியும் ஒரு தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியுள்ள‌து. இந்தத் தேடியந்திரம் ஒளிப்படங்களைத் தேட உதவுகிறது. ஆனால் இது வழக்கமான ஒளிப்படத் தேடியந்திரம் அல்ல. கொஞ்சம் மாறுபட்டது. இது, ஒருவரது தோற்றத்திற்கான ஒளிப்படங்களைத் தேட உதவுகிறது.

‘ட்ரீம்பிட்' எனும் இந்தத் தேடியந்திரம் பயனாளிகளின் பிரத்யேக முக அம்சங்களை அலசி, ஆராய்ந்து குறிப்பெடுத்து அதன் அடிப்படையில், வேறு வித அம்சங்கள் அல்லது பல்வேறு காலகட்டங்களில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என அடையாளம் காட்டுகிறது.

தனிப்பட்ட ஒளிப்படத் தேடியந்திரம் என வர்ணிக்கப்படும் இதில் பயனாளிகள் தங்கள் ஒளிப்படத்தைச் சமர்பித்துவிட்டு, கூடவே தாங்கள் காண விரும்பும் தோற்றத்திற்கான குறிப்பையும் தெரிவிக்கலாம். உதாரணத்திற்கு, சுருள் முடியுடன் கூடிய தோற்றம் என்றோ, வயதான தோற்றம் என்றோ குறிப்பிடலாம். உடனே, தனது தரவுப் பட்டியலில் உள்ள ஒளிப்படங்களில் அதற்கு நிகரான அம்சம் கொண்டவற்றைக் கண்டெடுத்து அதில் பயனாளியின் முகத்தைப் பொருத்தித் தோன்றச் செய்கிறது.

இப்படி ஒருவர் தனது தோற்றம் எப்படியெல்லாம் இருக்கும் எனத் தேடிப்பார்த்துக்கொள்ளலாம். நிறம், தலைமுடியின் அம்சங்கள் மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் தோற்றத்தையும் தோன்றச் செய்யலாம்.

இந்தத் தளத்தில் நுழைந்தால் இந்த ஒளிப்பட மாற்றுத் தேடல் நுட்பம் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று இப்போதைக்கு முன்னோட்ட வடிவில் இருப்பதால், இதைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை அளித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். வெகு விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாகவுள்ளது.

உங்கள் தோற்றத்தைப் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்ப்பது ஒரு சுவாரசியம்தான். அதைச் செய்வதற்கு என்றே ஒரு தேடியந்திரம் உருவாகியிருப்பது இன்னும் சுவாரசியமானதுதான்.

முகம் உணர்தல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மென்பொருள் உதவியோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளரான இரா கெமில்மாக்கர் சில்சர்மேன் என்பவர் இந்தத் தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

ஆனால் ஒன்று, இது வெறும் சுவாரசியமானது மட்டும் அல்ல. நடைமுறையில் பலவிதங்களில் பயன்படக்கூடியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளரும்போது எப்படி இருப்பார்கள் எனக் கற்பனை செய்து பார்க்கலாம். நடிகர்கள் குறிப்பிட்ட பாத்திரங்களில் எப்படிக் காட்சி தருவோம் எனப் பார்த்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் காணாமல் போன குழந்தைகளின் தேடலிலும் இந்த நுட்பம் கைகொடுக்கும். கடத்தல்காரர்கள் குழந்தைகளின் தலைமுடி உள்ளிட்ட அம்சங்களை மாற்றி அடையாளம் தெரியாமல் செய்துவிடலாம். இதை முறியடித்து, காணாமல் போன குழந்தையின் பல்வேறு தோற்றங்களை ஊகித்துத் தேடலில் ஈடுபடலாம்.

தேடியந்திர முகவரி: >http://dreambit.xyz/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x