

மின்வணிக ஜாம்பவானான அமேசான் அமெரிக்கச் சந்தையில் அமேசான் பயர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ததும் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாததும் பழைய செய்தி. 83 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்கள் விற்காமல் தேங்கி இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமேசான், ஸ்மார்ட் போனை இத்தோடு விட்டுவிடும் என்று யாரேனும் நினைத்தால் அது தவறாகத்தான் இருக்கும். ஏனெனில் அமேசான் தொடர்ந்து ஸ்மார்ட் போன் திட்டத்தில் ஈடுபட்டு எதிர்காலத்தில் அடுத்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபார்ச்சூன் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசான் பயர் போன் விஷயத்தில் விலையில் தவறு செய்ததாகவும் அதனாலேயே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை எனவும் அமேசான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இ-புக் ரீடர் சாதனமான கிண்டில் விஷயத்தில் இப்படித்தான் ஆரம்பத்தில் நடந்தது ஆனால், தவறுகள் சரிசெய்யப்பட்ட பின் கிண்டில் கலக்கவில்லையா? என அமேசான் நினைக்கிறது. அதனால், அமேசான் ஸ்மார்ட் போன் சந்தையில் வைத்த கண்ணை எடுக்காமலே இருக்கிறது.