

ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் அவை மூலமே ஷாப்பிங் செய்யும் பழக்கமும் அதிகரித்து வருவதை வல்லுநர்கள் கவனித்துவருகின்றனர். இதனால் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் மட்டுமல்ல, ஸ்மார்ட் போன் மூலம் பணம் செலுத்தும் பழக்கமும் அதிகரித்துவருகிறது.
2017-ம் ஆண்டு வாக்கில் 200 கோடி ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் பயனாளிகள் ஏதோ ஒரு வகையான பரிவர்த்தனையை மேற்கொள்வார்கள் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது இந்த எண்ணிக்கை 160 கோடியாக இருக்கிறது என ஜூனியர் ரிசர்ச் ஆய்வு தெரிவிக்கிறது.
வங்கிச்சேவை, பணமாற்றம், ஷாப்பிங் எனப் பலவற்றுக்கு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவது மேலும் பிரபலமாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தானாக மறையும் செய்தியை அனுப்பும் செயலியான ஸ்னேப்சேட், அமெரிக்காவில் தனது சேவை மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கை உணர்த்துகிறது.