

ஸ்மார்ட் போன் மட்டுமா? ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஹோம் என்றெல்லாம் பேசப்படுகிறது. எல்லாமே ஸ்மார்ட்டாகி வரும் நிலையில் வீட்டில் பயன்படுத்தும் மின்விளக்குகளை இயக்கும் சுவிட்சுகளும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா? அதுதான் ஏவி-ஆன் (Avi-on ) எனும் நிறுவனம் புளுடூத்தால் வயர்லெஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் சுவிட்சை உருவாக்கி உள்ளது.
இந்த ஸ்மார்ட் சுவிட்சில் என்ன விஷேசம் தெரியுமா? பிளக் பாயிண்ட் பற்றிக் கவலைப்படாமல் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதை பொருத்திக்கொள்ளலாம். முக்கியமாக ஆணி அடிக்கும் அவசியம் இல்லை. அப்படியே ஒட்டி விடலாம். அதன் பிறகு இதை வயர்லெஸ் மூலம் அடாப்டர் வழியே விளக்குடன் இணைக்கலாம். அல்லது புளுடூத் பல்ப் வாங்கினால் அதனுடன் இணைத்துவிடலாம். இதன் இயக்கத்தை ஸ்மார்ட் போன் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஒட்டுமொத்த வீட்டையும் குறைந்த செலவில் ஸ்மார்ட் லைட்டிங் வசதி கொள்ளச்செய்யலாம் என்று ஏவி ஆன் தெரிவிக்கிறது.
ஆனால் இன்னமும் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. கிரவுட்சோர்சிங் முறையில் வாங்க ஒப்புக்கொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக இருந்தால் சென்று பார்க்கவும்: http://www.avi-on.com/avi-on