

கூகிளின் கூட்டணி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துவிட்டன. அரசியல் கட்சிகள் ஆள் இழுப்பு வேலைகளை தொடங்கிவிட்டன. இத்தருணத்தில் பிரபல தேடுபொறியான கூகிளும் தேர்தலுக்காக புதுக்கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. ‘தேர்தலில் கூகிளா? எந்த கட்சியுடன்? எத்தனை சீட்? என்று கேட்க வேண்டாம். ஏனென்றால், கூகிளின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமானது. தேர்தலில் வாக்காளர்களை வழி நடத்துவதற்காக இந்தியத்தேர்தல் ஆணையத் தோடு இணைந்து செயல்படவுள்ளது கூகிள். இதன்படி ஓட்டுரிமை உள்ள ஒருவர், தனது பெயர் மற்றும் முகவரியை கூகிளிடம் சொன்னால் போதும், சம்பந்தப்பட்டவருக்கான தொகுதி, அவருக்கான வாக்குச்சாவடியின் முகவரி போன்ற விவரங்களை நொடிப் பொழுதில் சொல்லிவிடும். இந்தச் சேவையை வழங்குவதற்காக கூகிளின் செர்வரில் இந்திய வாக்களர்களின் தகவல்களை பதிவேற்றும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் செய்யவுள்ளது. ஏற்கெனவே நடந்த 5 மாநில தேர்தலில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்ஸை அணியலாம்
ஆப்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள், இதுநாள் வரை டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லட் , ஸ்மார்ட்போன், என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே அடைந்திருந்தன. இனி அவற்றை உடலில் அணிகின்ற பொருட்களிலும் அக்சஸ் செய்ய முடியும். "Apps In Wearables" என்னும் இந்த புது ட்ரெண்டை நோக்கி அனைத்து நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன. இதற்கு பிள்ளையார்சுழி போடும் விதமாக ஸ்மார்ட் வாட்சினை சோனி நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் வாட்சையும், கூகிள் நிறுவனம் கூகிள் கிளாஸ் என அணிகின்ற மாதிரியான சாதனங்களையும் உற்பத்தி செய்துள்ளன. இப்போது இண்டெல் நிறுவனமும் அணிகிற மாதிரியான அப்ளிகேஷனை உருவாக்குவது பற்றி யோசித்து வருகிறது. இப்படி எல்லா நிறுவனங்களுமே அணிகிற மாதிரியான ஆப்ஸை தயாரிக்க ஆரம்பித்திருப்பதின் காரணம் இவற்றிற்கு தொழில்நுட்ப சந்தைகளின் நல்ல எதிர்காலம் உள்ளது என்ற ஒரு ஆய்வறிக்கை தானாம்.
எல்லோருக்கும் இணையம்
என்னதான் இணைய உலகம் நவீனம் அடைந்து வந்தாலும், ஒருவர் இணையதளம் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. இணையதளம் தொடங்க டொமைன் பதிவு செய்வதில் ஆரம்பித்து ஏகப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உச்சகட்டமாக அதை சொந்தமாக நிர்வகிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இந்த சிக்கலை தீர்க்க ‘ஸ்ட்ரைக்கிங்லி’ (strikingly) என்னும் வலைதளம் முளைத்துள்ளது. நமது ஃபேஸ்புக் தகவல்களை ‘ஸ்ட்ரைக்கிங்லி’யில் கொடுத்தால் சுடச்சுட நமக்கான வலைத்தளம் தயாராகிவிடும். இதில் எந்தவொரு புகைப் படத்தையோ, தகவல்களையோ நாமாக கொடுக்க தேவையில்லை, அனைத்தும் ஃபேஸ்புக்கிடமிருந்தே பெற்றுக் கொள்ளப்படும். இவை அனைத்தும் அதிபயங்கர அதிகப்படியான பாதுகப் பாப்புடன் செய்யப்படும் என்று கூறுகின்றனர்.