

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், தன் மனைவி பிரிசில்லா படித்த மாசசூசெட்ஸ் பள்ளிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
உலகின் இளம் பணக்காரர்களில் ஒருவரான 33 வயது மார்க் மற்றும் அவரின் மனைவி இருவரும் செவ்வாய்க்கிழமை பாஸ்டன் அருகே, மாசசூசெட்ஸில் உள்ள குவின்ஸி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர்.
குவின்சி பள்ளியில்தான் 2003-ல் பிரிசில்லா தனது படிப்பை முடித்துள்ளார். அங்கு சென்ற இருவரும், பள்ளிக்கு நன்கொடை அளித்தனர். ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள மார்க், ''ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் பிரிசில்லா படித்த பள்ளிக்கும் சென்றோம். அவர் படிக்கும்போது பள்ளியின் தலைசிறந்த மாணவியாக இருந்தார். டென்னிஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் குழுவின் தலைவியாக இருந்துள்ளார். பிரிசில்லாவின் ஆசிரியர்கள் அவரைப் பற்றி ஏராளமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
லைவ் வீடியோ
பின்னதாக ஹார்வர்ட் இல்லத்தில் உள்ள தன்னுடைய பழைய ஓய்வறையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை லைவ் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் மார்க் வெளியிட்டார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும், புதிய சந்திப்புகளையும், எதிர்கால திட்டங்களையும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.