

முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துகளை அறிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் ‘டூபூல்.கோ' (doopoll.co) இணையதளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டுக் கருத்துக்கணிப்பு நடத்த வழிசெய்கிறது. இந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டு, நீங்கள் கருத்துகளை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம்.
ஆம், இல்லை எனப் பதில் அளிக்கும் எளிய கேள்வியில் தொடங்கி, ஒரே கேள்விக்குப் பல பதில்களை அளிக்கும் வாய்ப்பு அளிப்பது வரை பல விதமாக இதில் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இப்படி இணைய வாக்கெடுப்பு நடத்த உதவும் இணையதளங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. ஆனால் இந்தத் தளம் கூடுதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இந்தத் தளத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணங்களும் இடம்பெற்றுள்ளன. நேரில் கேட்கும்போது பலர் வெளிப்படையாகக் கருத்துக் கூறத் தயங்கலாம். இப்படிக் கேள்வி கேட்டுப் பதில் அளிக்கச் சொல்வதன் மூலம் நேர்மையான எதிர்வினையை அறியலாம் என இந்தத் தளம் குறிப்பிடுகிறது. உடனடியாகப் பதில்களை அறியும் வசதியும் இருக்கிறது.
நீங்களும் முயன்று பார்க்கலாம்: >http://doopoll.co/