

பிரபலமான இன்ஸ்டாகிராமில் தொடங்கி ஒளிப்படங்களுக்கான செயலிகள் அநேகம் இருக்கின்றன. இவை பிரதானமாக ஒளிப்படங்களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ள வழி செய்பவை. ஒளிப்படங்களை மெருகேற்றும் ‘ஃபில்டர்'கள் தான் இவற்றின் தனிச்சிறப்பு.
இவை தவிர, கேமராவில் கிளிக் செய்த ஒளிப்படங்களை ஓவியங்களாக மாற்றித்தரும் செயலிகளும் இருக்கின்றன. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது ‘பிரிஸ்மா ஆப்'.
இந்தச் செயலி மூலம், ஒருவர் தான் எடுக்கும் ஒளிப்படம் அல்லது ஏற்கெனவே எடுத்த ஒளிப்படத்தை ஒவியமாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தச் செயலியை இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். பயனாளிகள் தங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை அணுக இதற்கு அனுமதி அளித்தால், அதில் கிளிக் செய்யும் காட்சியை அப்படியே ஓவியமாக மாற்றிக் கொள்ளலாம். இல்லை என்றால், கேமராவில் கிளிக் செய்து சேமித்த படத்தை இந்தச் செயலி மூலம் திறந்து ஓவியமாக்கிக்கொள்ளலாம்.
ஏற்கெனவே உள்ள இது போன்ற செயலிகள் போட்டோஷாப் முறையில் ஓவியமாக்குகின்றன. இந்தச் செயலி, பிரத்யேகமான செயற்கை அறிவு நுட்பத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.
எளிமையான செயல்பாடு கொண்ட இந்தச் செயலி ஓவிய மாற்றத்திற்கான பல வகையான ஃபில்டர்களைக் கொண்டுள்ளது. ஐபோனுக்கு முதலில் அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு வடிவம் தயாராகிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: >http://apple.co/29uXxLq