Published : 11 Oct 2014 06:36 PM
Last Updated : 11 Oct 2014 06:36 PM

பொய்யான வயதுடன் கணக்கைத் தொடங்கிய உலகின் மூத்த ஃபேஸ்புக் பதிவர்!

அமெரிக்காவைச் சேர்ந்த 113 வயது பாட்டி அன்னா ஸ்டோஹெர் தன்னை ஃபேஸ்புக்கில் இணைத்துக் கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் இருக்கும் வயது வரம்பு கொள்கையால் அவரும் பல ஃபேஸ்புக் பயனர்களைப் போல தனது வயதை மாற்றிப் பதிவு செய்தே கணக்கை தொடங்க முடிந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மினியோஸ்டாவில் வசிப்பவர் அன்னா ஸ்டோஹெர். அவர் தனது வீட்டில் உள்ளவர்கள் அன்றாடம் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருப்பதை கண்டு தனக்கும், அதில் கணக்கை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் அன்னாவின் ஆசையை அலட்சியப்படுத்தினர்.

இதன் பின்னர் ஃபேஸ்புக் குறித்து முழுமையாக அறிந்துகொண்ட அன்னா, அதில் கணக்கைத் துவங்குவதற்காக தனது விவரங்களை பதிவு செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் ஃபேஸ்புக்கில் 1905-ஆம் ஆண்டுக்கும் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே இணைய முடியும் என்று அவருக்குத் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் தனது வயதை குறைத்து காட்டி கணக்கை தொடங்கலாம் என்ற முடிவுடன், தனது வயதை 15 வருடங்கள் குறைத்து தன்னை ஃபேஸ்புக்கில் இணைத்து கொண்டுள்ளார். 1900-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த அன்னா, வரும் 15-ஆம் தேதி தனது 114-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

114-வது வயதை நெருங்கும் வேளையில், ஃபேஸ்புக்கில் இணைந்தது தனக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். தனக்கு கூகுள், இ-மெயில் போன்ற விஷயங்கள் குறித்து முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த வெரிசான் நிறுனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், தனது வாழ்நாளில் பல இலக்கியங்களை படித்து அதன் மீது ஆர்வம் குறைந்ததாகவும், தற்போது ஐ-பேட் தனக்கு புது உலகத்தை காட்டி உள்ளதாகவும், ஃபேஸ்புக் புதியவர்களுடன் இணையும் தளமாக இயங்குவதாகவும் உற்சாகமாக அன்னா கூறுகிறார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் வயதான இளையதலைமுறையாக ‘oldest teenager’ அன்னா ஸ்டோஹெர் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x