Last Updated : 28 Oct, 2015 06:24 PM

Published : 28 Oct 2015 06:24 PM
Last Updated : 28 Oct 2015 06:24 PM

கேண்டி கிரஷ் முதல் நெட் நியூட்ராலிட்டி வரை: டெல்லியில் மார்க் பகிர்ந்த 10 ஸ்டேட்டஸ்

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் புதன்கிழமை டெல்லி ஐஐடி-யில் டவுன்ஹால் கேள்வி - பதில் நிகழ்வின் மூலம் பேராசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இதை முன்னிட்டு காலையிலேயே மாணவர்கள் கூட்டம் களைகட்டியது. டவுன்ஹால் முழுவதும் சிறிது நேரத்திலேயே நிரம்பியது. அதில் மார்க் பேசியதின் சுருக்கப்பட்ட வடிவம்:

* "இந்தியாவில் 13 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததும், செயல்பாடுகள் நிறைந்ததுமான சமுதாயத்திடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இந்தியாவில் இருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. இங்கிருக்கும் உங்களின் ஆற்றல், என்னை வியக்க வைக்கிறது.

* இந்தியா மிகப்பெரிய மக்களாட்சியைக் கொண்ட நாடு. உலக மக்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க எண்ணும்போது, உங்களால் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது.

* இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பத்து பேரிலும், ஒருவர் வேலை பெறுகிறார்; மற்றொருவர் வறுமையில் இருந்து வெளியே வருகிறார். இணையப் பயன்பாடு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

* இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி (Internet.org) இப்போது 24 நாடுகளில் உள்ளது. இதன்மூலம், உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த முயற்சியால், இந்தியாவில் மட்டும் பத்து லட்சம் பேர் இணைய வசதி பெற்றுள்ளனர். 'இலவச அடிப்படை இணையம்' மூலம், மக்கள் எல்லா இணைய வசதிகளையும் பயன்படுத்த முடியாது. ஆனால் அடிப்படை இணையம், எதற்காக இணையம் தேவை என்ற புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்தும்.

* கேள்வி - பதில் நேரத்தில் ஒருவர் கேட்ட, 'கேண்டி கிரஷ் அழைப்புகளை எப்படித் தவிர்ப்பது?' என்ற கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது. பதிலளித்த மார்க், "அதற்கான தீர்வைக் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

* என்ன மாதிரியான சூப்பர் பவரை விரும்புவீர்கள்? என்ற கேள்விக்கு, "தொழில்நுட்பம். அதன்மூலம் என்ன வகையான சூப்பர் பவர் வேண்டுமோ, அதை நீங்கள் பெறலாம்" என்றார் மார்க்.

* ஃபேஸ்புக்கில் என்ன புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? என்று கேட்டதற்கு, "5 முதல் 10 வருடங்களில் ஃபேஸ்புக்கில் சிறந்த முறையில் மொழிமாற்றம் செய்து, அனைவரும் அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளும் வகையில், கணிப்பொறி அமைப்புகளை மாற்ற எண்ணியிருக்கிறோம்" என்றார்.

* "வருங்காலத்தில் தகவல்களை சேமித்து வைப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் காணொலி முக்கியப் பங்கு வகிக்கும். இப்போது நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த செயல்திட்டத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் படத்தைத் தொட்டுணர முடியும்" என்றார்.

* "மனிதர்களைப் புண்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவோரின் செயல்களைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்று ஃபேஸ்புக்கின் எதிர்காலத் திட்டம் பற்றி விவரித்தார்.

* "இலவச அடிப்படை இணையம், ஒருபோதும் இணைய சமவாய்ப்பை (நெட் நியூட்ராலிட்டி) எதிர்க்கவில்லை. இணைய சமவாய்ப்பு என்பது முக்கியமானது. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மக்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்து, பின்னர் என்ன செய்வது என்று யோசித்துத் தேங்கிவிடும் போக்கு தற்போது பெருகி வருகிறது" என்றார் மார்க்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x