வாட்ஸ் அப்பில் எப்படி இருக்கிறது புதிய ஸ்டேட்டஸ் வசதி?

வாட்ஸ் அப்பில் எப்படி இருக்கிறது புதிய ஸ்டேட்டஸ் வசதி?
Updated on
1 min read

உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.

இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி இந்த வசதியைப் பெறுவது?

இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால் உங்களின் நண்பர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அதை அனுப்பலாம்.

உங்கள் ஸ்டேட்டஸை உங்களது வட்டாரத்தில் யார் யார் பார்த்தார்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல், யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு வசதியும் உங்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

உலகம் முழுக்க 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமாகப் பரிமளித்திருக்கிறது வாட்ஸ் அப். 2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது. இதனால் ஃபேஸ்புக்கைப் போலவே வாட்ஸ் அப்பிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறை மற்றும் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in