Last Updated : 03 Oct, 2013 01:06 PM

 

Published : 03 Oct 2013 01:06 PM
Last Updated : 03 Oct 2013 01:06 PM

நாட்டின் இளம் தொழிலதிபர்கள்

சென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷ்ரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் "கோ டைமன்ஷன்ஸ்" என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் "ஆப்ஸ்" என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக்கூடிய "கேச் மீ காப்", "எமெர்ஜென்சி பூத்" உள்ளிட்ட ஏழு செயலிகளை இரண்டு வருடத்திற்குள் உருவாக்கியுள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோ டைமன்ஷன்ஸின் தலைவரான ஷ்ரவண், "ஒவ்வொரு செயலியை உருவாகியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்துக் கொண்டிருந்தது. எங்களால் வெளியில் சென்று திருடன் போலீஸ் விளையாட முடியவில்லை. இதுவே செயலியாக கைப்பேசியில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாமே என்று தோன்றியது. அப்போதுதான் ’கேச் மீ காப்’செயலியை உருவாகினோம்.” என்று புன்னகைக்கிறார். தங்கள் பள்ளிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதை ரசித்து விளையாடியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஆபத்தில் உதவும் செயலி

"எமெர்ஜென்சி பூத்" என்ற செயலியை ஆபத்து காலத்தில் ஒரு முறை அழுத்தினால் காவல்துறை, அவசர ஊர்தி அல்லது தீயணைப்பு படை தானாகவே அழைக்கப்படும். இதில் உங்கள் குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் எண்ணை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கும் ஒரே கிளிக்கில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த செயலி உருவான சந்தர்ப்பத்தை விளக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய்,"ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கள் உறவினர்களை அவசரமாக அழைக்க முயன்ற போது, கைப்பேசியில் எண்களை தேடுவதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. அப்போது கிடைத்த யோசனையை வைத்துதான் இந்த செயலியை உருவாக்கினோம்” என்கிறார்.

இந்த சகோதரர்களின் தாயும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜோதி லட்சுமி, " குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறினேன். இதை முக்கியமாக எடுத்து கொண்டு "ஆல்ஃபபட் போர்ட்" என்ற எழுத்துகளை அறிமுகப்படுத்தும் ஆப்பை உருவாக்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பெருமையுடன் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தை விட பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த சகோதரர்களின் கனவாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x