

ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கு விடை காண இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும். சரி, ஆப்பிள் வாட்சை அணிந்துகொண்டால் எப்படி இருக்கும்? பிரபல பேஷன் பத்திரிகையான வோகின் (Vogue ) சீன பதிப்புப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் தெரியும். வோக் நவம்பர் இதழின் முகப்பு பக்கத்தில் சீன சூப்பர் மாடல் லியூ வென் ஆப்பிள் வாட்ச் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். ஆப்பிள் வாட்ச் பற்றிய விரிவான விளக்கங்களும் இதழில் உள்ளன.
‘மற்ற நாடுகளைவிட சீன மக்கள்தான் புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர்’- சீன வோக் இதழை ஏன் ஆப்பிள் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அதன் எடிட்டர் இன் சீஃப் ஏஞ்சலிசியா செயூங் அளித்துள்ள பதில் இது.
இதனிடையே ஆப்பிளின் வடிவமைப்பு நுட்பங்களை நகலெடுப்பதாக அதன் வடிவமைப்புப்பிரிவு துணைத்தலைவர் கூறியுள்ள புகாருக்கு, சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோமி ( Xiaomi ) தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும், வேண்டுமானாலும் ஐவிக்கு ஒரு ஜியோமி போனைப் பரிசாக அனுப்பிவைக்கத் தயார் என்று கூறியுள்ளார். சபாஷ் சரியான சவால்தான்.