இணையம் இயங்க இனி சூரிய ஒளி போதும்

இணையம் இயங்க இனி சூரிய ஒளி போதும்
Updated on
1 min read

வீட்டில் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் மின்சாரம்தான் இல்லை. அதனால் இண்டர்நெட் இருந்தும் சரியாக அதைப் பயன்படுத்த முடியவில்லை என்பது நம்மில் பலரது கவலை. ஒருசிலரது வீடுகளில் இன்வெர்ட்டெர் பொறுத்தி மின்சாரப் பிரச்சினையைச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும்போது அப்படிச் சமாளிக்கலாம். எங்கேயோ வெளியில் செல்லும்போது இணையத்திற்கான மின்சாரம் எப்படிக் கிடைக்கும்?

இந்த கவலையைப் போக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் கணினி நிபுணர்கள். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள் இண்டர்நெட் இயங்கவும் தகவல்களைப் பரிமாறவும் இனி சூரிய சக்தியே போதும் என்கிறார்கள்.

அதற்கான ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்களாம். பகலில் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகள் மூலம் உலகளாவிய வலையின் சமிக்ஞைகளைக் கண்டறியவும் தகவல்களைப் பரிமாறவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் துறை.

கேபிள்கள் மூலம் இணைக்கப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இணி இணையத்தை இயக்கலாம். இணையம் வேலை செய்யத் தேவையான ஆற்றலையும் சூரிய சக்தித் தகடுகள் வழங்கும். அதைப் போலவே இணைய தகவல்களைப் பரிமாறவும் அதே தகடுகள் உதவும். இந்த இரண்டு வேலைகளையும் சூரிய சக்தி தகடுகளைக் கொண்டே முடித்துவிட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டால் நெருக்கடி நேர நிலைமைகளை எளிதில் சமாளிக்கலாம். கரண்ட் போய்விட்டால் கம்யூட்டரை இயக்க முடியாது என்னும் நிலைமை போயே போய்விடும்.

இந்தத் தொழில்நுட்பத்தை லைஃபை (Li-Fi) என அழைக்கின்றனர். சூரிய சக்தி மூலம் எல்.இ.டி. பல்புகளை எரியவைத்து அதன் வழியே தகவல்களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளார்கள். எடின்பர்க்கில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் தகவல்தொடர்புத் துறையின் பயோனியரான பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் இந்த்த் தொழில்நுட்பம் குறித்து விரிவுரை வழங்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதைப் போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in