

இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும்போது, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இந்தியர்களில் 95 சதவீதம் பேர் அதை மிகவும் முக்கியமாகக் கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பயண இணையதளமான எக்ஸ்பீடியா சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியர்கள் ஸ்மார்ட் போனைத் தங்கள் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கமாகக் கருதுவதாக தெரிவிக்கிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 8,856 ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலக அளவில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயனாளிகள் அதிகம் இருப்பதாகவும், உலகிலேயே இந்தியர்கள் தான் விடுமுறை காலத்திலும் ஸ்மார்ட் போனை எடுத்துசெல்பவர்களில் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. ஆச்சரியப்படும் வகையில் கூகுள் கிளாஸ் பயனாளிகளும் இந்தியாவில் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நிறுவனம் நடத்திய ஆய்வு என்பதால், இந்தியர்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயணங்களைத் திட்டமிடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.