Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

நாளைய உலகம்: ரோபோ கப்பல்

ஆண்ட்ராய்ட் பயணம்:

பெங்களூருவில் ஆட்டோ சேவை வழங்கி வரும் ‘நம்ம பெங்களூரு’ என்னும் நிறுவனம் எம்காடி எனப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நமக்கு ஆட்டோ தேவை என்றால் ஸ்மார்ட் போனை எடுத்து எம்காடி அப்ளிகேஷனிடம் தெரிவித்தால் போதும். போனில் உள்ள ஜி.பி.எஸ். மூலம் நாமிருக்கும் இடம் அந்த நிறுவனத்தின் ஆட்டோ டிரைவருக்கு (அந்த சுற்றுவட்டாரத்தில் இருப்பவருக்கு) தெரிவிக்கப் படும். அடுத்த 5 நிமிடத்தில் அவர் நம்மை தேடி வந்து விடுவார். நாம் செல்கிற தூரத்தை பொறுத்து பயணக்கட்டணத்தையும் அந்த அப்ளிகேஷனே சொல்லிவிடும். நம்மை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநரை அவரின் நடவடிக்கைகளை வைத்து எம்காடியில் நாம் மதிப்பிடலாம். பயணி அளிக்கும் மதிப்பீட்டை வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறதாம் ‘நம்ம பெங்களூரு’ நிறுவனம்.

கூகிள் லென்ஸ்:

கூகிள் நிறுவனம் மருத்துவ துறையிலும் தனது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தான் கூகிள் கிளாஸை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் இப்போது கூகிள் காண்டாக்ட் லென்ஸ் என்னும் புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. முழுக்க முழுக்க மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சாதனம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த சாதனத்தை சாதாரண காண்டாக்ட் லென்ஸை போலவே கண்களில் அணிந்து கொள்ளலாம். இரண்டு மெலிதான கண்ணாடி அடுக்குகளின் இடையே நுண்ணிய ஒயர்லெஸ் சிப்கள் பொருத்தப்பட்ட இந்த லென்ஸை கண்ணில் பொருத்திவிட்டால், கண்ணில் உள்ள ஈரப்பதத்தை வைத்தே உடலில் உள்ள சர்க்கரை அளவை சொல்லிவிடுமாம்.

ரோபோ கப்பல்:

ஓவ்வொரு கப்பலையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கட்டுக்கோப்பாக செலுத்த வேண்டிய கடமை அந்த கப்பலின் கேப்டனுக்கும் அவருடைய குழுவிற்கும் உண்டு. ஆனால் இப்படி கேப்டன் மற்றும் கப்பலை இயக்கும் குழுக்கள் பயணங்களின்போது அடைகிற துன்பங்கள் கொஞ்சம் செஞ்சமல்ல. உணவில் ஆரம்பித்து உயிரை பாதுகாப்பது வரை எல்லாமே ஆபத்தானவை. இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆளில்லாமல் ரோபோக்களை பயன்படுத்தி கப்பல்களை இயக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த திட்ட வேலைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது. Maritime Unmanned Navigation through Intelligence in Networks என்னும் பெயரில் ரோபோக்கள் இயக்குகிற கப்பலை தயாரிக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இனி விரைவில் கடல்களில் மனிதர்கள் இல்லாத ரோபோ கப்பல்கள் பயணமாவதை பார்க்கலாம்.

புது முயற்சி:

பேஸ்புக், ட்விட்டர் எப்படியோ அதைப் போலவே ‘லிங்க்ட் இன்’ என்னும் சமூக வலைத்தளம் உள்ளது. ஆனால் அது பேஸ்புக்கை போல் பொழுதுப் போக்குக்கான தளம் அல்ல. கிட்டத்தட்ட புரொபஷனல் சமூக வலைத்தளம் என்று சொல்லலாம். உலகம் முழுக்க இந்த தளத்தில் 259 மில்லியன் பயனர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த உறுப்பினர்களை குஷிப்படுத்தும் விதமாக லிங்க்ட் இன் வலைத் தளத்திற்கான தன்னார்வ பணியாளர் என்னும் வேலைவாய்ப்பினை வழங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது. வலைத்தளத்தை கட்டமைக்கும் முயற்சியாக அதன் உறுப்பினர்களை பயன்படுத்தும் முயற்சி தான் இதுவாம். மேலும் அந்த உறுப்பினர்களை தங்கள் வலைத்தள வேலைகளுக்கு மட்டுமன்றி சமூகப்பணிகளில் ஈடுபடவைக்கிற திட்டமும் லிங்க்ட் இன்னிடம் உள்ளதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x