

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிய வரவு வர்த்தக நிறுவனத்திடம் இருந்து இல்லாமல் பாப் பாடகரிடம் இருந்து வந்திருக்கிறது. பிலாக் ஐடு பீஸ் குழுவின் தலைமைப் பாடகரான வில்.இ.யம் (Will.i.am) கொஞ்சம் வித்தியாசமான பாடகர்.
தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இவர், தனது ஐ.யம்+ (i.am+ ) நிறுவனம் மூலம் பிளஸ் எனும் பெயரில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்திருக்கிறார். கையணி சாதனம் போன்ற தோற்றத்தை இது கொண்டிருக்கிறது.
3ஜி இணைப்பு வசதி, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட் போன் உதவி இல்லாமலே பேசலாம். செய்தியும் அனுப்பலாம்.
அதற்கேற்ப சிம்கார்டு வசதியுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலானது தான். பெடோமீட்டர், ஆக்ஸ்லோமீட்டர் எல்லாம் இருக்கிறது. டிவிட்டர், ஃபேஸ்புக் வசதியும் இருக்கிறது. இதற்கென்றே குரல் வழி உதவியாளர் வசதியும் இருக்கிறது.
இதற்கான பேட்டரிபேக் உள்ளிட்ட துணை சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது விலை அறிவிக்கப்படவில்லை.
பாடகரின் ஸ்மார்ட் வாட்ச் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு இந்த வாட்ச் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.