

தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில் செல்போன் குறுஞ்செய்தியை (எஸ்.எம்.எஸ்) காட்டிலும், ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள “வாட்ஸ் ஆப்” (whats app) வசதியையே இந்த ஆண்டு பலரும் பயன்படுத்தியதைக் காண முடிந்தது.
தொடுதிரை வசதி கொண்ட ஆண்ட்ராய்ட் செல்போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் விலை பெரிதும் குறைந்திருப்பதும் இதற்குக் காரணம். இவ்வகை செல்போன்களில் “வாட்ஸ் ஆப்”, “வைபர்” போன்ற செயலிகள் (Applications) மூலம் இலவசமாக படம், வீடியோ மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப முடியும் என்பதால், பெரும்பாலானோர், குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அலுவலகம் செல்வோரிடம் இவற்றுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. இலவச எஸ்.எம்.எஸ். திட்டத்தில் இருப்பவர்களும் கூட பண்டிகைக் காலங்களில் எஸ்.எம்.எஸ். அனுப்ப பணம் வசூலிக்கப்படுகிறது. 20 பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கூட ரூ.20 செலவாகும். எனவே, பலரும் “வாட்ஸ் ஆப்” போன்ற ஆண்ட்ராய்ட் செயலிகள் மூலம் பண்டிகை தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்பு, வாழ்த்து தெரிவிக்க பண்டிகை தினத்தன்று மட்டும் கட்டணம் வசூலித்ததால் பண்டி கைக்கு முந்தைய நாளே வாழ்த்துகள் அனுப்பப்பட்டன. ஆனால் இப்போது முந்தைய நாளும் கைப்பேசி இணைப்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே வாழ்த்து அனுப்ப வேண்டியுள்ளது. கட்டண குறைப்பு வசதியும் பண்டிகை தினத்தன்று செயல்படாது.
எனவே மக்களின் கவனம் “வாட்ஸ் ஆப்” பக்கம் திரும்பியுள்ளது. இதுபற்றி மென்பொருள் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் அவினாஷ் கூறுகையில், “எஸ்.எம்.எஸ். அனுப்ப பண்டிக்கைக்கு ஒரு நாள் முன்பே நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் பண்டிகைத் தினத்தன்று வாழ்த்து அனுப்புவதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே “வாட்ஸ் ஆப்”பில் அனுப்புகிறேன். வெளி நாட்டில் இருக்கும் எனது நண்பர்களுக்கும் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக வாழ்த்து அனுப்ப முடிகிறது,” என்கிறார்.
வித விதமான வாழ்த்து அட்டைகளை அலங்கரித்து நெருங்கி யவர்களுக்கு அஞ்சல் அனுப்பி வந்த பழக்கம் காணாமல் போய்விட்டது. கடைகளிலும் வாழ்த்து அட்டை கள், குறிப்பாக தமிழ் வாழ்த்து அட்டைகளின் விற்பனை வெகு வாக குறைந்துவிட்டது. பொங்கல், தமிழ் புத்தாண்டு தவிர மற்ற பண்டிகைகளுக்கு அவை விற்கப்ப டுவதே இல்லை என்று கூட கூறலாம்.
எஸ்.எம்.எஸ். வாழ்த்து அட்டை களின் காலத்தை வென்றது. இப்போது எஸ்.எம்.எஸ்.களை வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் பின்னுக்குத் தள்ளிவிட்டன. இது குறித்து மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மாணவியான கே.சந்தனா கூறுகையில், “என் நண்பர்கள் பலர் “வாட்ஸ் ஆப்”-ல் உள்ளனர். இதில் எவ்வளவு பெரிய வாழ்த்தையும் ஒரே நொடியில் எனது எல்லா நண்பர்களுக்கு அனுப்பி விட முடியும். சாதாரண தகவல்களைக் கூட இதில் பகிர்ந்து கொள்வதால் வாழ்த்தையும் இதிலேயே தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார்.