Published : 29 Sep 2018 12:52 PM
Last Updated : 29 Sep 2018 12:52 PM

நம் செல்போனில் நுழையும் மால்வேர்களால் தகவல்கள் திருட்டு: எச்சரிக்கும் கியூ2 2018 ஆய்வுத் தகவல்

நமக்குத் தெரியாமலேயே நம் செல்போன்களில் நுழையும் பொல்லாத மால்வேர்களால் நிதி தொடர்பான தகவல்கள் திருட்டும், பண மோசடிகளும் நடைபெறுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பாதுகாப்பு மற்றும் தீர்வுகள் அளித்துவரும் மும்பையிலிருந்து இயங்கிவரும் 'குயிக் ஹீல்' நிறுவனம் காலாண்டு தோறும் ஆய்வுசெய்து வருகிறது.

மூன்று மாதங்களை உள்ளடக்கி கண்டறியும் ஆய்வறிக்கைக்கு ''கியூ2 2018'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் ஆண்ட்ராய்டு போன்களைக் குறிவைக்கும் சைபர் அச்சுறுத்தல்கள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான அச்சுறுத்தல்கள்

ஆண்ட்ராய்டு போன்களின் வழியாக லட்சக்கணக்கான பொல்லாத டிவைஸ்கள் புற்றீசல் போல தோன்றி நம் வாழ்வாதாரத்தின்மீது தாக்குதல் நிகழ்த்த காத்துக்கொண்டிருப்பதாக இதன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டுமே ஆண்ட்ராய்டு சாதனங்கள் வழியாக 6,31,000 சைபர் அச்சுறுத்தல்கள் உலவுவது கண்டறியப்பட்டுள்ளது.

கணினிகள் மற்றும் கணினி அமைப்புகளைச் சேதப்படுத்த அல்லது முடக்கக்கூடிய மென்பொருள்கள் 2 ஆயிரமும், 3 ஆயிரம் சக்திவாய்ந்த தேவையற்ற அப்ளிகேஷன்களும் தினம் தினம் ஆண்ட்ராய்டுகளில் வலம் வருகின்றன. இது மட்டுமின்றி ஒரு பயனர் ஆன்லைனில் இருக்கும் போது தானாக விளம்பரங்களை (பெரும்பாலும் தேவையற்றது) விளம்பரப்படுத்தி அல்லது பதிவிறக்கும் மென்பொருள்கள் மட்டும் 1,000 உள்ளனவாம்.

இவை நமது செல்போன்களில் ஒவ்வொரு நாளும் உலா வந்து நம்மை அச்சுறுத்தும் நாம் கோரிப் பெறாத ஆப்கள். இந்த காலாண்டு அறிக்கையில் டாப் டென் மால்வேர் எவை எவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கொரில்லா,எம், உள்ளிட்ட பொல்லாத மால்வேர்கள்

அதாவது நமது ஆண்ட்ராய்டுகளில் அழையா விருந்தாளியாக வந்து தொந்தரவு செய்யக்கூடிய கணினிகள் மற்றும் கணினி அமைப்புகளைச் சேதப்படுத்த அல்லதுமுடக்கக்கூடிய முன்னணி 10 மென்பொருள் ஆப்களில், ஆண்ட்ராய்டு.கொரில்லா,எம், ஆண்ட்ராய்டு.எஸ்எம்எஸ்ரெக்.டிஏ மற்றும் ஆன்ட்ராய்டு.ஏர்புஷ்.ஜே ஆகியவை மிகமிகப் பொல்லாதவை.

சைபர் அச்சுறுத்தல்களில் ஒரே கூட்டணியாக நமது போன்களில் இறங்கும் சக்திவாய்ந்த தேவையற்ற அப்ளிகேஷன்களின் குடும்பம் மட்டுமே 46.2 சதவீதம் ஆகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இத்தகைய சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு உணர்வு குறைந்த பயனர்கள்

என்ன தரவுகளைச் சொல்லி எச்சரித்தாலும் செல்போன் பயன்படுத்துபவர்களிடையே பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை உணர்வு மிகவும் பின்தங்கியிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பெரும்பாலான பயனர்கள் தங்கள் மடிக்கணினிகளில் மற்றும் டெஸ்க்டாப்பில் மேம்பட்ட பாதுகாப்பு மென்பொருளை நிறுவுகின்றனர், ஆனால் பெரும்பாலும் தங்கள் மொபைல் சாதனங்களை ஏனோ புறக்கணிக்கின்றனர். இது ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் சைபர் கிரிமினல்களுக்கும் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது என்பதை மறந்துவிடுகின்றனர்.

பேங்க் ட்ரோஜன்

முக்கியமாக இத்தகைய நமது அலட்சியத்தால், பணப்பரிவர்த்தனை தொடர்பான நெட்வொர்க்குகளை மோப்பம் பிடிக்கும் 'பேங்க் ட்ரோஜன்' எனும் மால்வேர்கள் மற்றும் குறியாக்கத் தாக்குதல்களின் எண்ணிக்கை செல்போன்களில் அதிகரித்து வருகிறது.

சாதாரணமாக நுழைந்து பாதிப்பை நிகழ்த்தும் மொபைல் டிவைஸ்களை நாம் முதலில் நம்மால் இனங்காண முடியாது என்பது உண்மைதான். ஆனால் நமது செல்போனில் புதிய தேவையற்ற ஆப்கள் நுழையாதவாறு தடுக்கும் மென்பொருள் ஆப்களை நிறுவிக்கொள்ளுதல் சாத்தியமாகக் கூடியதுதான்.

பாதிப்பை நிகழ்த்தும் அத்தகைய டிவைஸ்கள் மூலம் கைதேர்ந்த குற்றவாளிகள் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடிய பிறகு வருந்தி என்ன பயன்?

ஜப்பானில் பணப் பரிவர்த்தனைகளை செயல்படுத்திவரும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 430 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில்: பால்நிலவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x