Published : 08 Sep 2014 02:53 PM
Last Updated : 08 Sep 2014 02:53 PM

முகநூல் காட்டும் முகம்

இன்று நீங்கள் தும்மினால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமோ தெரியாது உலகம் முழுதும் தெரிந்துவிடும். ஃபேஸ்புக் அக்கவுண்ட் மட்டும்தான் தேவை.

செல்ஃபி தீவிரவாதிகள்

பலருக்கு இன்று முகநூல் இல்லாவிட்டால் கை நடுக்கம் வருகிறது. எதாவது செய்து கவன ஈர்ப்பு செய்ய வேண்டிய நெருக்கடி இவர்களுக்கு.

சிலருக்கு சொந்தச் சரக்கு தீர்வதில்லை. இவர்கள் செல்ஃபி தீவிரவாதிகள். ஷங்கர் பட நாயகர்களாக சமூகக் கோபம் கொப்பளிப்பார்கள். இவர்கள் ஆளுக்கு ஒரு மாநிலமாய் ‘ஒரு நாள் முதல்வர்கள்’ ஆனால் இந்தியா வரும் வியாழக்கிழமைக்குள் வல்லரசாக ஆகும் என தோன்றும். முக நூலின் ஆக்ஷன் ஹீரோக்கள் இவர்கள்.

“லைக்குகள்” வியாபாரம்

சொந்தச் சரக்கு இல்லாதவர்களுக்கு ஒரே தாரக மந்திரம்: “திரட்டு அல்லது திருட்டு”. இவர்கள் முழு நேரம் வலை வீசி “அட!” போட வைக்கும் விஷயங்களைக் கொண்டு பகிர்வார்கள். கேப்டன் காமெடி, தலாய் லாமா பொன்மொழி, சமகால நிகழ்விற்கு வடிவேல் வசனம் என டாபிக்கலாக இருக்கும்.

இவற்றுக்கு பதியும் “லைக்குகள்” சமூக அந்தஸ்த் தின் பிரதிபலிப்பு. லைக்குகள் கிடைக்கப் பலர் செய்யும் பிரம்மப்பிரயத்தனங்கள் சுவாரசியமானவை. ஆனால் லைக்குகள் அதிகம் பெற்றுத்தர பல வியாபார சேவை நிறுவனங்கள் உள்ளதாக சென்ற ஆண்டு என் மும்பை நண்பர் சொன்ன போது தான் இதன் வியாபார முகம் புரிந்தது.

சமூக ஊடக ஜன்னல்கள்

ஃபேஸ்புக், லிங்கிட் இன், ட்விட்டர் போன்றவைகளில் உங்கள் பங்கீடுகள் உங்களை உலகம் அறிய வைக்கும் ஜன்னல்கள். வேலை தேடுவோர், ஆட்கள் தேடுவோர், தொழில் முனையத் தேடுவோர், ஜோடி தேடுவோர் என அனைவரும் முதலில் நோக்குவது உங்கள் சமூக வலை தளப்பக்கங்களைத் தான்.

வேலை தேடுவோர், வேலை மாற்ற நினைப்போர் அனைவரும் தங்கள் வலை தளப் பக்கங்களை கண்காணித்தல் நல்லது.

இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வலை தள வியாபாரத்தை விருத்தி செய்யப் பார்க்கின்றன. மற்ற வடிவங்களில் வியாபாரம் செய்தாலும் கம்பனி வெப்சைட்டும், ஃபேஸ்புக், லிங்கிட் இன் பிஸினஸ் பக்கங்களும் இன்று அவசியம்.

லிங்கிட் மூலம் வேலை

சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தன் ரெக்ரூட்மெண்ட் பணியில் மூன்றில் ஒரு பங்கை லிங்கிட்- இன் மூலமாகச் செய்வதாகக் கூறுகிறது. செலவும் குறைவு, நம்பகத்தன்மையும் அதிகம்.

உங்களைப் பற்றிய நிஜக் கருத்துக்கள் அறிய உங்கள் வலை தளப் பதிவுகளை ஆராய்கிறார்கள். தொழில் நுட்பம் இன்று யாரையும் யாரும் தொடும் தூரத்தில் வைத்துள்ளது.

அதனால் சில பால பாடங்கள் வேலை தேடுவோர், வேலை தாவுவோர் அனைவருக்கும் தேவை .

உங்கள் படம் முகம் தெரிவதாக இருக்கட்டும். அது நிஜ பிம்பத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கட்டும். அஞ்சான் சூர்யா, பையா தமன்னா படங்களில் மறைந்துகொள்ளாதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கைக் குறைவைக் காட்டும்.

உங்கள் படிப்பு, சொந்த ஊர், வேலை, பணி அனுபவம், பொழுதுபோக்குகள் போன்றவை முழுதாக இருத்தல் நலம். முக்கியமாக நிஜமாக இருக்கட்டும். முகநூல் உங்கள் பர்சனல் பக்கம் என்றால் லிங்கிட் - இன் அஃபிஷியல் பக்கமாக இருக்கட்டும். இரு பக்கத் தகவல்களும் ஒத்துப் போக வேண்டும்.

நீங்கள் விரும்பிப் பகிரும் செய்திகள் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். உங்கள் படிப்பு, வேலை, தொழில் அனுபவம் சார்ந்த பதிவுகள், உங்கள் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தும். உங்கள் தொழிலில் உங்களுக்கு உள்ள திறனையும் விருப்பத்தையும் தெரியப்படுத்தவும். உங்களை தேர்வு செய்வோருக்கு அது உதவும்.

நீங்கள் பங்குகொள்ளும் குழுக்கள் என்ன? அதன் குறிக்கோள்கள் என்ன? அதில் உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நோக்கங்களை அவை பிரதிபலிக்கின்றனவா? இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் தொழில், வாழ்க்கை இரண்டுக்கும் முக்கியமாகப் படும் குழுக்களில் மட்டும் சேருங்கள்.

உங்கள் நண்பர்கள், தொடர்புகளின் தரம் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பாதிக்கும். எண்ணிக்கையைவிடத் தரம் முக்கியம்.

லிங்கிட் இன்னில் உங்களைப் பற்றிய முக்கியஸ்தர்களின் பரிந்துரைகள் நன்மை சேர்க்கும். அதனால் துறை சார்ந்த வல்லு நர்கள் தொடர்புகளும் அவர்கள் பரிந்துரைகளும் அவசியம். அவற்றை நாடிச் செல்வது நல்லது.

உங்கள் வலைத் தளப் பக்கங்கள் சுய விளம்பரம் போல இல்லாமல் உங்களைப் பற்றியச் சரியான மதிப்பீட்டை உருவாக்குகின்றனவா என்று தொடர்ந்து கண்காணியுங்கள்.

அகத்தின் அழகு முகநூலில்

தனி மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சமூக ஊடகங்கள் எப்படியெல்லாம் உதவலாம் என்று இன்று ஆலோசனைகள் கிடைக்கின்றன. உங்கள் வலைதளப் பக்கங்களைச் சீரமைப்பதின் மூலமாக உங்கள் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். நிறுவனங்கள் தங்கள் வியாபாரத் தேவைகளுக்காக சமூக ஊடக வியூகங்களை மாற்றி அமைக்கின்றன. கட்சிகளும் இயக்கங்களும்கூட வலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

நீங்கள்?

உங்கள் வேலை, தொழில், பிற நாட்டங்கள் என அனைத்து செயல்பாடுகளையும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் சரியாகக் காண்பிக்கின்றனவா?

அகத்தின் அழுகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி!

அகத்தின் அழகு முகநூலில் தெரியும் என்பது புது மொழி!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x