

புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி (Messenger application), பயனர்கள் யாரோடு என்ன பேசுகிறார்கள் என்பதை உளவு பார்க்கும் வகையில் மறைமுக ஆணைகள் (code) கொண்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக மதர்போர்ட் டாட் காம்-ஐ சேர்ந்த ஜோனதன் கூறும்போது, "இந்த மெசஞ்சர் செயலியில் பல்வேறு வகையான உளவு பார்க்கும் ஆணைகள் பொதிந்துள்ளன. இதில் இருக்கும் ஆணைகளைப் பார்க்கும்போது, முடிந்தவரை பயனர்களின் ஒவ்வொரு நடவடிகையையும் கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும், இந்தச் செயலியின் கட்டமைப்பு ஆணைகளை பார்க்கும்போது, பயனர் தனது ஃபோன் மூலம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது சேகரித்து வைக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர், "பயனர்களின் அந்தரங்கத்தை காப்பாற்றுவதே எங்களது முதல் குறிக்கோள். மற்ற செயலிகளைப் போலவே, நாங்களும் அதன் பயன்பாட்டை கண்காணித்து, அதற்கேற்றவாரு மேம்படுத்துகிறோம்" எனக் கூறியுள்ளார்.
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் செயல்படும் ஃபேஸ்புக் மெசஞ்சர், இதுவரை 500 மில்லியன் முறைகளுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.