Published : 07 Jan 2019 01:46 PM
Last Updated : 07 Jan 2019 01:46 PM

ஐபோன் மூலம் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஹுவாய் ஊழியர்கள்: மெமோ கொடுத்து சம்பளத்தையும் குறைத்த ஹுவாய்

ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஐபோன் மூலம் புத்தாண்டு வாழ்த்து கூறிய இரண்டு ஊழியர்களின் சம்பளத்தை ஹுவாய் நிறுவனம் குறைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் மெமோ அளிக்கப்பட்டுள்ளது.

2019 புத்தாண்டை முன்னிட்டு, ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து  Happy #2019 என்ற தலைப்பில் வாழ்த்து கூறப்பட்டது. அந்தப் பதிவு ஐபோன் மூலம் பதிவிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த ட்வீட்டை ஹுவாய் நிறுவனம் உடனடியாக நீக்கியது. எனினும் பதிவு தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகப் பரவின.

இதற்காக ஜனவரி 3-ம் தேதி ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டது. இதுகுறித்துக் கூறிய கார்ப்பரேட் மூத்த துணைத் தலைவரும் இயக்குநருமான சென் லிஃபாங், ''இந்த சம்பவம் ஹுவாய் பிராண்டின் நற்பெயரைக் குலைத்துவிட்டது'' என்றார்.

இதுகுறித்து வழங்கப்பட்டுள்ள மெமோவில், ''புத்தாண்டு தொடங்கிய நள்ளிரவில் ஹுவாய் அலுவலக கணினியின் விபிஎன்னில் (VPN) பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களைக் கவனிக்கும் ஊழியர், தன்னிடம் இருந்த ஐபோன் மூலம் பதிவிட்டார்.

இது ஹுவாய் பிராண்டின் நற்பெயரைக் குலைத்துவிட்டது. நிர்வாக மேற்பார்வையில் ஏற்பட்ட தவறு இது. இதற்காக இரண்டு ஊழியர்களின் பதவி ஒருபடி குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஊதியம் 728 டாலர்களுக்குக் (சுமார் 50 ஆயிரத்து 700 ரூபாய்) குறைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக சீன நிறுவனமான ஹுவாய் டெக்னாலஜீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x