

ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போன்களின் முதல் வரிசை அறிமுகமான பரபரப்புகூட அடங்கவில்லை, அதற்குள் அடுத்த வரிசை ஆண்ட்ராய்டு ஒன் போன்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போன்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது. அதற்கேற்ப இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைக் குறி வைத்துப் பெரிய அளவில் திட்டமும் வகுத்துள்ளது. கார்பன் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் இரண்டாவது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் தளம் தெரிவிக்கிறது.
தொடர்ந்து ஸ்பைஸ் நிறுவனமும், குறைந்த விலை போனுக்கு பெயர் பெற்ற இண்டெக்ஸ் நிறுவனமும் அறிமுகத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிகழலாம். முதல் அறிமுகங்களில் மீடியாடெக் சிப்கள் இருந்தன. இனி குவால்காம் சிப்களும் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது