Published : 16 Aug 2014 12:15 PM
Last Updated : 16 Aug 2014 12:15 PM

உலகின் முதல் ஸ்மார்ட்போனுக்கு இன்று வயது 20!

உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஐபிஎம் சிமோன் (IBM Simon) என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தபட்டு இன்றுடன் (சனிக்கிழமை) 20 ஆண்டுகள் ஆகிறது.

அமெரிக்காவின் செல்பேசி நிறுவனமான பெல்சேல்ஃப் (BelSelf) மற்றும் ஐபிஎம் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய இந்தச் செல்பேசி, கடந்த 1994-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரம் பேட்டரி இருக்கும் இந்த ‘பழைய’ செல்பேசி, 23 சென்ட்மீட்டர் நீளமும், அரைக் கிலோ எடையும் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன், ஒரு செங்கலின் பாதி அளவு இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து ஐரிஷ் டைம்ஸ் தெரிவிக்கையில், “இந்த ஸ்மார்ட்போன், சிமொன் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இது பார்க்க மிக எளிமையாக இருந்தது மட்டுமல்லாமல், நாம் இதனை வைத்து என்ன செய்ய நினைக்கிறோமா, அது செய்யும் வல்லமைக்கொண்டிருந்தது.”, என்று கூறுகின்றது.

பச்சை எல்.சி.டி திரைக்கொண்டிருந்த சிமோனில் தொடுதிரை தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் பயனாக, இந்தச் செல்பேசியில் மற்றவரைகளைத் தொடர்பு கொள்வது, குறிப்பு எடுத்துக்கொள்வது, தேதி மாற்றிக்கொள்வது, ஃபாக்ஸ் அனுப்பவும், பெற்றுக்கொள்வதும் என வசதிகள் இருந்தன.

இது தொடர்பாக லண்டன் அறிவியல் பொருட்காட்சியகத்தைச் சேர்ந்த சார்லோட் கான்னிலே (Charlotte Connelly) பேசுகையில், “இந்தச் செல்பேசியில், ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருந்தன. ஆகையால், இது உண்மையிலேயே ஐபோனுக்கு முன்னோடிதான்” என்று தெரிவிக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில், ஏறக்குறைய 50,000 சிமோன் ஸ்மார்ட்போன்கள் விற்றுத் தீர்ந்தது.

வரும் அக்டோபர் மாதம், இந்த ஸ்மார்ட்போனானது லண்டன் அறிவியல் பொருட்காட்சியகத்தில் நிரந்தரக் காட்சி பொருளாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x