

நோக்கியாவின் ஸ்லைடர் வசதி கொண்ட மேட்ரிக்ஸ் போனை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் ஆவதற்கு முன் பிரபலமாக இருந்த இந்த போன், இப்போது புதிய வடிவில் மறு அறிமுகமாகியுள்ளது. நோக்கியா பிராண்ட் உரிமையைப் பெற்றுள்ள எச்.எம்.டி. குளோபல் நிறுவனம், நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருவதோடு அதன் மறக்க முடியாத பழைய போன்களையும் மீண்டும் அறிமுகம் செய்துவருகிறது. கடந்த ஆண்டு 3310 ரக போன் அறிமுகமானது. இந்த ஆண்டு தொடக்கத்தில், 8110 ரக போனும் இதேபோல மறு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது இந்த போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் விலை ரூ.5,999. பழைய போனில் இருந்த ஸ்லைடர் வசதி இதிலும் உள்ளது. ஸ்லைடரை விடுவித்துவிட்டு டயல் செய்யலாம், பேசலாம். ஸ்லைடர் நீண்டிருக்கும்போது வளைவாக காட்சி அளிப்பதால் இந்த போன் ‘வாழைப்பழ போன்’ என்றும் குறிப்பிடப்பட்டது. ஹாலிவுட் படத்தில் தோன்றியதால் மேட்ரிக்ஸ் போன் என்றும் அழைக்கப்பட்டது. புதிய போனில் ஸ்னேப்ட்ராகன் சிப், 4ஜி வசதி, கேமரா உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கெய் இயங்குதளம் பயன்படுத்தப்படுவதால் வாட்ஸ்அப் போன்ற சேவைகளையும் பயன்படுத்தலாம்.