

கூகுள் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல், இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, நிறுவனத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் ஊழியர்கள் பலர் இது தொடர்பாகக் கடிதம் எழுதி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நிறுவனத் திட்டங்கள், சேவைகள் தொடர்பாக வெளிப்படையான முறையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூகுள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து வெளியேறியது. தேடல் முடிவுகளைத் தணிக்கை செய்யும் நிர்ப்பந்தம் காரணமாக கூகுள் இந்த முடிவை மேற்கொண்டது. ஆனால், தற்போது தணிக்கை செய்யப்பட்ட வடிவிலான தேடல் சேவையுடன் மீண்டும் சீனாவில் நுழைய கூகுள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.
கூகுள் தரப்பில் இந்தச் செய்தி உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.