

“எப்போ பார்த்தாலும் போனும் கையுமா இருக்குற” என்பதைச் சொல்லாதவர்களும் இல்லை, கேட்காதவர்களும் இல்லை. அப்படித் திறன்பேசிக்கும் நமக்கும் ஓர் உறவு என்றாகிவிட்டது. வாயில் பல் இல்லாதவரைக்கூடப் பார்த்துவிடலாம். ஆனால், கையில் போன் இல்லாத ஒருவரைப் பார்ப்பது அரிது.
அப்படி மூன்றாவது கைபோல ஆகிவிட்டது இந்தத் திறன்பேசி. பொதுவாக நாம் பயன்படுத்தும் திறன்பேசியின் முதன்மைப் பயன்பாடு ஒருவரைத் தொடர்புகொண்டு பேசுவதுதான். ஆனால், இன்று பேசுவது குறைந்து, மற்ற சேவைகளுக்காகத்தான் திறன்பேசி அதிகம் பயன்படுகிறது. மற்றவர்கள் சொல்லித்தான் நாம் அதிக நேரம் திறன்பேசியில் மூழ்கிக் கிடக்கிறோம் என்பதே நமக்குத் தெரியவரும்.