

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற பழமொழி எக்காலத்துக்கும் பொருந்தும். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சித் திறன்பேசியைப் பயன்படுத்தினால் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் கேடு’ என்பது புதுமொழி ஆகிவிட்டது. திறன்பேசியைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது எனும் அளவுக்கு இன்று நிலைமை தலைகீழ். இந்தச் சூழலில் தெரிந்தோ தெரியாமலோ இணைய அடிமையாக இருப்பவர்களில் நீங்களும் ஒருவராகக்கூட இருக்கலாம்.
பிரச்சினைகள் என்ன? - டிஜிட்டல் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தும் போது முதலில் பாதிக்கப் படுவது தூக்கம்தான். திறன்பேசி, மடிக்கனிணி, டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் சாதனங்களை ஒருவர் பயன்படுத்துவது இன்று சாதாரண மாகிவிட்டது. தூக்கமின்மை என்பது மன அழுத்தம், கவனச் சிதறல் போன்ற தீவிர பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு நாமே எடுப்பது நல்லது.