

இணையவழிக் குற்றங்களில் முதலீடு தொடர்பாக மக்கள் ஏமாறும் போக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தில் இடம்பெற்ற வசனம் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். “ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் ஆசையைத் தூண்ட வேண்டும்” என்கிற அந்த வசனம்தான் இணையவழிக் குற்றவாளிகளின் தாரக மந்திரம். அந்த வகையில் சில மாதங்களாக தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது ஓர் இணைய மோசடி விவகாரம்.
பழங்களின் மீது முதலீடு செய்து உங்களால் லாபம் சம்பாதிக்க முடியுமா? இதையே ஒரு மோசடியாக அரங்கேற்றியிருக்கிறார்கள். ஜெர்மனியிலிருந்து செயல் படுவதாக அறிவித்துக்கொள்ளும் ஒரு நிறுவனம், இப்படி ஒரு முதலீட்டு ஆசையைத் தூண்டி பலரையும் முதலீடு செய்ய வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் இணையம் வழியாகவோ அல்லது அந்த இணையத்தில் உள்ள செயலியைப் பதிவிறக்கம் செய்தோ கைபேசி எண்ணைப் பதிவுசெய்து அதில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.