சமூக ஊடகத்தில் ஒளிந்திருக்கும் திருடர்கள்

சமூக ஊடகத்தில் ஒளிந்திருக்கும் திருடர்கள்
Updated on
2 min read

பெருகும் இணையவழிக் குற்றங்களில் இணையம் மூலமான வணிகமும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இணையம் மூலம் பொருள்கள் வாங்குவதும், அதில் ஏமாறுவதும் தொடர்கதையாகவே நடக்கிறது. இதில் குறைந்த அளவிலான பணத்தை இழப்பவர்கள் பெரும்பாலும் வெளியே சொல்லிக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், சிறிய தொகையாக இருந்தாலும் இணையவழி மோசடிக்காரர்கள் எவ்வளவு பேரிடம் இப்படி மோசடிச் செய்வார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அது மொத்தம் எவ்வளவு பெரியத் தொகையாக மோசடிக்காரர்களுக்குக் கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். இணையவழி வணிகத்தில் ஏமாறுபவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகம் வழியாகவே ஏமாறுகிறார்கள்.

சமூக ஊடக விளம்பரம்: சென்னையைச் சேர்ந்த இளம்பெண் மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்றொரு நாள் திறன்பேசியில் இன்ஸ்டகிராமில் மூழ்கியிருந்தார். அதில் ஒரு விளம்பரம் அவர் கண்ணில் பட்டது. அழகழகான முகம் பார்க்கும் கண்ணாடி விற்பனை பற்றி இன்ஸ்டகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பக்கத்தில் சென்று பார்த்த மாலினிக்கு, அங்கு பதிவிடப்பட்டிருந்த கண்ணாடிப் படங்கள் மனதைக் கவர்ந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்த மாலினிக்கு ஒரு கண்ணாடியின் டிசைன் மிகவும் பிடித்திருந்தது. அதை வாங்கலாமா என்கிற கேள்வியுடன் விலையைப் பார்த்தார்.

ரூ.900 என்று போட்டிருந்தது. சரி, வாங்கிவிடலாம் என்று உள்மனம் சொல்லவே, வாங்க முடிவுசெய்தார். இது உண்மையான நிறுவனமாக இருக்குமா என்று சந்தேகம் மாலினிக்கு எழுந்தது. தாங்கள் ‘உத்தமர்’கள் என்கிற ரீதியாக எழுதி வைத்து, வங்கி விவரங்களை எல்லாம் கொடுத்திருந்தார்கள். அதனால், மாலினிக்குச் சந்தேகம் தீர்ந்தது.

பொருளை வீட்டில் கொடுக்கும்போது ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மாலினி விரும்பினார். ஆனால், உடனே பேமெண்ட் செய்தால் 10% தள்ளுபடி என்று போட்டிருந்தது. பொருளும் இலவசமாக டெலிவரி செய்யப்படும், பொருளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு என்று அருகே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. உடனே பணம் செலுத்தினால் இதெல்லாம் கிடைக்கும் என்பதால், மாலினி டிஜிட்டல் பேமெண்ட்டைத் தேர்ந்தெடுத்தார்.

பொருளை இணையம்வழி ஆர்டர் செய்தபோது ‘ஆர்டர் உறுதிசெய்யப்பட்ட தகவல்’ கிடைத்ததால், ஒரு சில நாள்களில் டெலிவரி ஆகிவிடும் எனச் சாதாரணமாக இருந்துவிட்டார் மாலினி. ஆனால், பொருள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடனே அந்த இன்ஸ்டகிராம் பக்கத்துக்குச் சென்று அதிலிருந்த எண்ணுக்கு அழைத்தார். ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ என்று வந்தது. பிறகுதான் ஏமாந்துபோனது மாலினிக்கு உறுதியானது. ஆனால், ரூ.900 தானே என்று அமைதியாக இருந்துவிட்டார்.

என்ன செய்ய வேண்டும்? - சமூக ஊடகம் மூலம் ஆடைகள், ஒப்பனைப் பொருள்கள், விதவிதமான காலணிகள் உள்ளிட்டவற்றை இணையம்வழியே வாங்கும்போது பெண்களே அதிகம் ஏமாறுகிறார்கள். சமூக ஊடகத்தில் வரும் இதுபோன்ற விளம்பரங்களுக்கு 2-3 நாள்களுக்குத்தான் உயிர் இருக்கும்.

ஆர்டர் செய்வதற்காக அணுகும்போது போன் செய்தால் பேசுவார்கள். ஆனால், பொருள் வரவில்லை என்று போன் செய்யும்போது போனே வேலை செய்யாது. அதற்குள்ளாகக் கிடைக்கும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். பிறகு சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சமூக ஊடகம் மூலம் கடை விரிப்பார்கள். இதில் ஏமாறுபவர்கள் குறைந்தத் தொகையாக இருப்பதால் புகார் அளிக்கவும் முன்வர மாட்டார்கள்.

மற்றவர்களுக்குத் தெரிந்தால் கேலி, கிண்டல் செய்வார்கள் என்பதால் சொல்லவும் மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் புகார் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைத் துரிதமாகப் பிடிக்கப் புகார்கள் உதவும். சமூக ஊடகத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு ஆர்டர் செய்ய வேண்டும். ‘கேஷ் ஆன் டெலிவரி’ செய்ய முடியாத அளவுக்கு ‘ஆஃபர்’ கொடுத்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏமாறாமல் இருக்க விரும்பினால், நேரிடையாகச் சென்று பொருள் வாங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

(வெளியேற வழி காண்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in