‘டேட்டிங்’ செயலியில் உங்கள் ஒளிப்படம் இருந்தால்...

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
Updated on
2 min read

இன்றைய சமூக ஊடக யுகத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கள் ஒளிப்படங்களையோ காணொளிகளையோ பதிவிட்டு, அதற்கு லைக்ஸ், ஷேரிங், கமெண்ட் பெறுவது அந்தஸ்துக்கு உரிய ஒன்றாகிவிட்டது. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவற்றை ஒளிப்படங்களாக எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவிட்டுத்தான் மறுவேலையே பார்க்கிறார்கள். பொதுவாகச் சமூக ஊடகங்களில் ஆண், பெண் என யார் ஒளிப்படங்களைப் பதிவிடுவதும் சிக்கல்களை உருவாக்குவதற்குச் சாத்தியம் அதிகம். குறிப்பாக, பெண்களுக்கு வில்லங்கம் வீடு தேடி வரலாம்.

ஒளிப்படம் தந்த சிக்கல்: சித்தூரைச் சேர்ந்த ஓர் இளம் பெண் தமிழ்நாட்டில் வசிக்கிறார். அவருக்கு ஆண் நண்பர் ஒருவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. அந்த நண்பர் பார்த்த ஒரு ‘டேட்டிங்’ செயலியில் அந்தப் பெண்ணின் ஒளிப்படம் இருக்கும் அதிரவைக்கும் தகவலைச் சொன்னார். அதை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து அந்தப் பெண்ணுக்கும் அனுப்பி வைத்தார். அதைக் கண்ட அந்த இளம் பெண்ணுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில், அந்தப் பெண் ‘டேட்டிங்’கிற்குக் காத்திருப்பதைப் போல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

செய்வதறியாது திகைத்த அந்தப் பெண், அந்தச் செயலியில் உள்ள தனது ஒளிப்படத்தை எப்படி நீக்குவது என்று தெரியாமல் தவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தன் நண்பர்களின் உதவியை நாடிப் பார்த்தார். ஆனால், அந்த ஒளிப்படத்தை அகற்றுவதற்கான வழி கிடைக்கவில்லை. இறுதியில் தைரியமாக சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார். பிறகு காவல் துறையினரின் உதவியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாள் தவறாமல் சமூக ஊடகத்தில் ஒளிப்படங்களைப் பதிவிடும் பழக்கம் அந்த இளம் பெண்ணுக்கு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

எப்படி ஈடுபடுகிறார்கள்? - இதுபோன்ற இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அழகான பெண்கள் சமூக ஊடகத்தில் பதிவிடும் ஒளிப்படங்கள்தான் குறி. அப்படிச் சமூக ஊடகம் வழியாகக் கிடைக்கும் பெண்களின் ஒளிப்படங்களைச் சேகரித்து வைத்து, ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து, போலியாகச் செயலியை உருவாக்கி அதில் பதிவிட்டு விடுவார்கள்.

இதன்மூலம் சபல ஆண்களை ஈர்த்து, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதுதான் மோசடிக்காரர்களின் உத்தி. போலி செயலியில் அழகான பெண்களின் ஒளிப்படங்களைப் பார்த்து, மோசடிக்காரர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணம் செலுத்தினால் அவ்ளோதான். பணம் காலி. இப்படி முன்பின் தெரியாத இளம் பெண்ணின் ஒளிப்படத்தைக் காட்டி, சபல ஆண்களை மயக்கி சம்பாதிக்கும் சைபர் குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள்.

எப்படித் தடுக்கலாம்? - முதலில் இளம் பெண்கள் மட்டுமல்ல யாருமே சமூக ஊடகத்தில் ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்யக் கூடாது. மீறி செய்யப் போகிறோம் என்றால், முதலில் ‘செட்டிங்’ பகுதிக்குச் சென்று உங்கள் பக்கத்தை மற்றவர்கள் அணுக முடியாதபடி ‘லாக்’ செய்துவிட வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் நட்பு கோரிக்கைகளைக் கண்டபடி ஏற்றுக்கொள்ள வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த நண்பரின் பரஸ்பர நண்பராக இருந்தாலும், உங்களுக்குத் தெரியாதவர் என்றால் அந்த நட்பு கோரிக்கையை நிராகரித்து விடுங்கள்.

யாரென்றே உங்களுக்குத் தெரியாதவர், எப்படிப்பட்டவராக இருப்பார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்பதை முதலில் உணருங்கள். இவற்றையெல்லாம் செய்யத் தவறினால் சமூக ஊடகம் வழியாக ஊடுருவும் நபர்கள் உங்கள் ஒளிப்படத்தை எடுத்து ‘மார்பிங்’ செய்து, ஆபச ‘டேட்டிங்’ செயலிகள், இணையதளங்களில் பதிவேற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு வேளை ஏதாவது ஒரு செயலியிலோ இணையதளத்திலோ உங்கள் படம் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது தெரிய வந்தால், பயப்படாமல் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்யுங்கள். இதேபோல ஆண்களும் எந்த டேட்டிங் செயலி, இணையதளத்தை நம்பி டிஜிட்டல் வழியாகப் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். ஏனெனில் இதுபோல கணக்கிலடங்காத போலி செயலிகளும் இணையதளங்களும் உள்ளன. ஆக, இவற்றுக்குள் சென்று உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம்.

( வெளியேற வழி காண்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in