சேகரிப்பாளர்களுக்கான ஃபேஸ்புக் | சைபர் வெளி

சேகரிப்பாளர்களுக்கான ஃபேஸ்புக் | சைபர் வெளி
Updated on
3 min read

சேகரிப்பாளர்களுக்கான ஃபேஸ்புக்: புதிதாக ‘மேண்டல்’ (https://www.onmantel.com/) எனும் சமூக வலைப்பின்னல் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. ஃபேஸ்புக் போல பொதுவான சமூக வலைப்பின்னல் இது இல்லை. மாறாகக் குறிப்பிட்ட ஆர்வம் கொண்டவர்களுக்கான பிரத்யேக வலைப்பின்னல்.

அந்த வகையில், சேகரிப்பாளர்களுக்கான ஃபேஸ்புக் என்று இந்தச் சேவையைச் சொல்லலாம். ஆம், ஆர்வம் காரணமாக விதவிதமான பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்குள் நட்பு வலை விரிக்க வழிசெய்யும் நோக்கத்துடன் இத்தளம் அறிமுகம் ஆகியுள்ளது.

சேகரிப்பைச் சிறு வயது பழக்கம் என்று மட்டும் நினைக்க முடியாது. ஆர்வ மிகுதியால் துறை சார்ந்த பொருள்களை ஈடுபாட்டுடன் சேகரிக்கும் பழக்கம் வளர்ந்த பின்னரும் பலருக்கு இருக்கிறது. சிலர் இசைத்தட்டுகள், வீடியோகேம், விளையாட்டு அணி அட்டைகள் எனச் சேகரிக்கலாம். எந்தச் சேகரிப்பாக இருந்தாலும், அந்த ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சேவைதான் இந்தத் தளம். இந்தத் தளத்தின் மையப் பகுதியில், சேகரிப்பாளர்களின் பகிர்ந்துகொள்ளலைக் காணலாம்.

மற்றபடி சேகரிப்பாளர்களை அறிமுகம் செய்து கொள்வது, பின்தொடர்வது உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. எத்தனையோ வலைப்பின்னல்கள் இருந்தாலும், சேகரிப்பாளர்களுக்கெனத் தனி வலைப்பின்னல் இல்லை எனும் குறையை உணர்ந்து, இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளதாக அதன் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

சாட் வித் சாண்டா: சாட்ஜிபிடி கட்டணச்சேவையைப் பயன்படுத்துபவர்கள் எனில், இந்த சாட்பாட்டுடன் குரல் வழி உரையாட முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சாட்ஜிபிடியின் பல் ஊடகவழி வசதி மூலம் இந்தக் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளலாம். இதற்கென பல வகையான குரல் அமைப்புகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வரிசையில் இப்போது, சாண்டா எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா குரலுடனும் உரையாடும் வசதியை சாட்ஜிபிடி அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி மாதம் வரை இந்த வசதி அமலில் இருக்கும். இதனிடையே ஜிபிடி சார்ந்த தேடல் சேவை சர்ச்ஜிபிடியைக் கட்டணச்சுவரிலிருந்து விடுவித்து அனைத்துப் பயனாளிகளுக்கும் திறந்துவிட்டுள்ளது. சாட்ஜிபிடி தொடர்பான இன்னும் முக்கிய அறிவிப்புகளுக்கு; https://openai.com/12-days/

‘ரெட்டிட்’டில் வானொலி: ரெட்டிட் பயனாளிகள் இனி அதன் விவாதச் சரடுகளையும் துணை விவாதங்களையும் இணைய வானொலி நிகழ்ச்சி வடிவில் கேட்கலாம். இதற்கு வழிசெய்யும் வகையில், ரெட்டிட் விவாதச் சரடுகளை பாட்காஸ்ட் வடிவில் கேட்கச் செய்யும் ராட்காஸ்ட்.எப்.எம் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. ஸ்பாட்டிபையில் இனி கேட்கலாம். செயலி வடிவிலும் அறிமுகமாக உள்ளது.

எக்ஸ் மெயிலுக்கு ரெடியா? - டெஸ்லா நிறுவனர் ட்விட்டர் தளத்தைக் கையகப்படுத்தி எக்ஸ் எனப் பெயர் மாற்றி நடத்திவரும் விதத்தில் பழைய ட்விட்டர் அபிமானிகளுக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால், எக்ஸ் சேவைக்காக எலான் மஸ்க் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறார் போலும்.

அடுத்த கட்டமாக, எக்ஸ் பெயரில் (Xmail) மின்னஞ்சல் சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக எக்ஸ் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். கூகுளின் ஜிமெயிலுக்குப் போட்டியாக விளங்கக்கூடும் என்றாலும், வழக்கமான மின்னஞ்சல் சேவைகள்போல இல்லாமல், மெசேஜிங் சேவைகளுக்கான உடனடித் தன்மையோடு இந்த எக்ஸ் மெயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் புதிய ஏஐ சேவை: ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் வரிசையில் கூகுள் விஸ்க் (https://blog.google/technology/google-labs/whisk/) எனும் புதிய ஏஐ சேவை சோதனை முறையில் அறிமுகம் ஆகியுள்ளது. உருவங்களை உருவாக்கித் தரும், இமேஜ் ஜெனரேட்டர் வகையைச் சேர்ந்தது என்றாலும், இதில் எழுத்து வடிவில் பயனாளிகளை எதையும் சொல்ல வேண்டியதில்லை. மாறாக, ஏதேனும் படம் அல்லது உருவத்தைச் சமர்ப்பித்தால் அதையே உள்ளீடாக ஏற்று, புதிய உருவங்களை உருவாக்கித் தருகிறது.

பின்னணியில் கூகுள் ஜெமினி சேவைப் படங்களைப் பார்த்து, பயனாளிகள் சார்பில் உள்ளீட்டுக் குறிப்பை எழுதுகிறது. எனினும் முழுப் படத்தின் ஆதார அம்சங்களை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுவதால் புதிய உருவம், பயனாளிகள் எதிர்பார்த்ததுபோல இருக்க வாய்ப்பில்லை. என்றாலும்கூட சுவாரசியமான எண்ணங்களுக்கு இது வித்திடலாம். முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது.

- enarasimhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in