ஸ்கைப் விசாரணை... பறிபோனது பணம்! | மாய வலை

ஸ்கைப் விசாரணை... பறிபோனது பணம்! | மாய வலை
Updated on
2 min read

இணையப் பயன்பாடும் திறன்பேசி பயன்பாடும் அதிகரித்துவிட்ட நிலையில், இதைச் சார்ந்து நடக்கும் இணையவழிக் குற்றங்களும் பெருகிவிட்டன. திறன்பேசி வழியாக வந்த ஓர் அழைப்பால் ஒரு பெண் ஏமாற்றப்பட்ட கதை இது. கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எந்த நாட்டின் கோடும் இல்லாமல் 10 இலக்க எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.

சில நேரத்தில் வாடிக்கையாளர் சேவை எண்போல 11 இலக்கத்திலும் அழைப்பு வரலாம். இப்படியான அழைப்புக்கு ஃபெடெக்ஸ் (fedex) அழைப்பு எனப் பெயர். அந்த அழைப்பை அப்பெண் எடுத்தவுடன் ஒருவர் உயரதிகாரி தோரணையில் மிடுக்காகப் பேசினார். மும்பையில் உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கூரியரில் சட்டவிரோதமாக ஒரு பார்சல் வந்திருக்கிறது என்றார் அந்த மோசடிக்காரர்.

பார்சல் மோசடி: பதறிப்போகும் அப்பெண், தான் அப்படி எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று மறுத்தார். உடனே அந்த மோசடிக்காரர், ‘உங்களிடம் விசாரணை நடத்தியாக வேண்டும். உடனே மும்பைக்கு வர வேண்டும்’ என்று உத்தரவுப் போட்டார். தான் எப்படி மும்பைக்கு வர முடியும் என்று அந்தப் பெண் மறுத்தார். நேரில் வர முடியவில்லை என்றால் உயரதிகாரியுடன் ‘ஸ்கைப்’ மூலம் பேசுங்கள் என்று மோசடிக்காரரிடமிருந்து பதில் வந்தது. ஏற்கெனவே மிரட்சியில் இருந்த அந்தப் பெண், அதற்கு ஒப்புக்கொண்டார்.

அடுத்ததாக, இன்னொரு மோசடிக்காரர் உயரதிகாரியைப் போல விசாரிக்கத் தொடங்கினார். ஒவ்வொன்றாக விசாரித்து வந்தவர், இறுதியில் ரிசர்வ் வங்கியில் சரிபார்க்க வேண்டும் என்று வங்கிக் கணக்கு விவரங்களையும் விசாரிப்பதுபோல கேட்டிருக்கிறார் மோசடிக்காரர். எல்லாம் கைக்கு வந்தவுடன் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.99,000 உடனே வேறு கணக்குக்கு மாறிவிட்டது.

அதன்பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்தார். அந்த எண்ணுக்கு அப்பெண் அழைத்துப் பார்த்தார். எந்த அழைப்பும் செல்லவில்லை. பிறகு சைபர் குற்றத் தடுப்பு போலீஸில் அப்பெண் புகார் அளித்தார். இது ஒரு சிறு உதாரணம்தான். கூரியரில் சட்டவிரோதமாக பார்சல் வந்திருக்கிறது என்று திறன்பேசியில் அழைத்து விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த உயரதிகாரிகள்போலப் பேசி ஏமாற்றி, மக்களிடம் பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் இருக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற மோசடிக்காரர்கள் கோடிக்கணக்கான பணத்தை அப்பாவி மக்களிடமிருந்து பறித்திருக்கிறார்கள்.

எப்படித் தப்பிப்பது? - உள்நாட்டு அழைப்பு என்றால் +91 என்கிற எண்ணுடன் சேர்ந்துதான் அழைப்பு வரும். ஆனால், ஃபெடெக்ஸ் அழைப்பில் எந்த நாட்டின் கோடு எண்ணும் இல்லாமல் வெறுமனே 10 இலக்கத்தில் மட்டுமே வரும். அதுபோன்ற அழைப்புகளைப் புறந்தள்ளிவிட வேண்டும். சில நேரத்தில் வாடிக்கையாளர் சேவை எண் போன்றும் அழைப்பும் வரும். அந்த அழைப்பை ஏற்றாலும், ஒன்றை அழுத்துங்கள், இரண்டை அழுத்துங்கள் என்றெல்லாம் (Interactive voice response) ஐவிஆர் குரலில் ஒலித்தால் அதையும் புறந்தள்ளுங்கள்.

முதலில் எந்த விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் திறன்பேசியில் விசாரிக்க மாட்டார்கள். குறிப்பாக வாட்ஸ்அப், ஸ்கைப் வழியாக விசாரிக்கமாட்டார்கள். எனவே, இதுபோன்று விசாரணை என்றால் பதற்றமடையாமல், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வருகிறேன் என்று கூறுங்கள். ஒருவேளை வாட்ஸ்அப், ஸ்கைப் வழியாகப் பேச நேர்ந்தால், உங்களுடைய எந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டாம்.

ஒருவேளை சைபர் மோசடிக்காரர்கள் மூலம் உங்களுடைய பணம் பறிக்கப்பட்டிருந்தால் உடனே 1930 என்கிற எண்ணுக்கு அழைத்துப் புகாரைப் பதிவுசெய்ய வேண்டும். தாமதமாகப் புகார் அளித்தால், உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் வெவ்வேறு கணக்குகளுக்குச் சென்றுவிடும். அதை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டறிவது சவாலானதாக மாறிவிடும். எனவே, திறன்பேசி வழியாக யாராவது உயரதிகாரியைப் போல பேசினால், பதற்றமடையாதீர்கள். புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள்.

(வெளியேற வழி காண்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in