

இணையத்தில் நடைபெறும் மோசடிகள் பலவிதம்; அதில் இது ஒரு ரகம். சில மாதங்களுக்கு முன்பு உறவுக்காரப் பெண் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். அதில் பென்சில்களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று, தங்களது பென்சில்களை வீட்டிலிருந்தபடியே பேக் செய்து தந்தால் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
விருப்பம் உள்ளவர்கள் அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஆம்’ என்று பதில் அளிக்கும்படி தெரிவித்திருந்தார்கள். இதில் சேரலாமா, வேண்டாமா என்று அந்த உறவுக்காரப் பெண்ணுக்குச் சந்தேகம். அதை உறவினர்களில் ஒருவருக்கு அனுப்பி சந்தேகத்தைக் கேட்டிருந்தார். அந்த வாட்ஸ்அப் தகவலின் உண்மைத் தன்மையை அறிய கூகுளில் உறவினர் ஒருவர் தேடினார். அதில் இருந்த தகவல்கள் அடேங்கப்பா ரேஞ்சுக்கு இருந்தன.
உதவும் உள்ளம் கொண்ட நடிகர் ஒருவரின் படத்தைப் போட்டு ‘இவர் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நிறுவனத்தில் சேரலாம்’ என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது. இன்னொரு பதிவில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் படத்தைப் போட்டு ‘இவர்கள் சம்பாதிப்பது போல் நீங்களும் சம்பாதிக்க வேண்டுமா?’ என்று இருந்தது. இப்படியாக ‘பென்சில் பேக்கிங் ஜாப்’ என்று டைப் செய்தால் விதவிதமான பதிவுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இணையத்தில் கொட்டுகின்றன.
சரி, என்னதான் நடக்கிறது என்று அறிய ‘விருப்பம்’ என்று அந்த வாட்ஸ்அப் எண்ணுக்குப் பதில் அளித்தேன். அடுத்த விநாடியே அந்த நிறுவனத்தின் ‘விதிமுறைகள்’ என்கிற பெயரில் மறுபதிவு வந்து விழுந்தது. அதில் நம்முடைய ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றைப் பதிவேற்றும்படியும் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்தும்படியும் கூறப்பட்டிருந்தது.
அப்படிச் செலுத்தினால் பென்சில்களையும் பேக் செய்யும் அட்டைகளையும் கூரியரில் அனுப்பி வைப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த ஏமாற்று வேலைகளை ஏற்கெனவே படித்திருந்ததால், அந்த வாட்ஸ்அப் எண்ணை ‘பிளாக்’ செய்துவிட்டு உடனடியாக வெளியேறினேன். அதன் பின்னரும் வெவ்வேறு எண்களிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் சிறிது காலம் வந்தவண்ணம் இருந்தன. இதைப் பற்றி உறவுக்காரப் பெண்ணிடமும் விளக்கிக் கூறியதில், அவரும் உண்மையைப் புரிந்துகொண்டார்.
அந்தப் பிரபல நிறுவனத்தின் பென்சில்கள் பெயரிலும் நடைபெறும் இந்த இணைய முறைகேடு பற்றி மேலும் அறிய, அந்த நிறுவனத்தின் வலைதளத்துக்குச் சென்று பார்த்தால், வீட்டிலிருந்தபடியே செய்யும் இப்படிப்பட்ட பணிகளுக்குத் தாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் இது ஓர் ஏமாற்று வேலை என்றும் கூறப்பட்டிருந்தது. நாளிதழ்கள் சிலவற்றிலும் இச்செய்தி வெளியாகி யிருந்தது. அந்தப் பெண் சந்தேகப்பட்டு உறவுக்காரர் களிடம் கேட்டதால் இத்தனையும் தெரியவந்தது.
முதலில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் கண்ணில் பட்டு அதை அணுக நினைத்தால், அது தொடர்பான விவரங்களைத் தேட வேண்டும். அதன் உண்மைத்தன்மையை அறியாமல் அவசரஅவசரமாக எதிலும் ஈடுபடக் கூடாது. நீங்களே யோசித்துப் பாருங்கள். நவீன இயந்திரங்களைக் கொண்டு பென்சில்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம், அதை பேக்கிங் செய்வதற்கு மட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்குமா? இதைப் பற்றி ஏன் பலரும் யோசிப்பதில்லை.
இப்படி எதையும் சிந்திக்காமல் வாட்ஸ்அப் செய்தியை மட்டும் நம்பி இறங்குவதால், பலரும் பணத்தை இழந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் வெளியேயும் சொல்ல முடியாமல் பேசாமல் இருந்துவிடுவார்கள்.
உங்களுடைய வாட்ஸ்அப்பிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ இப்படிப்பட்ட மோசடி அழைப்புகள் வரக்கூடும். அப்படி வந்தால், அதை நம்பி அணுக வேண்டாம். இந்த வழிகளில் வரும் லிங்கை எக்காரணம் கொண்டும் ‘கிளிக்’ செய்ய வேண்டாம். அது நிச்சயம் போலியாகவே இருக்கும்.
தொடர்ந்து இதுபோன்ற தகவல் வாட்ஸ்அப்புக்கு வந்தால் அந்த எண்ணை ‘பிளாக்’ செய்து ரிப்போர்ட் அடியுங்கள். வேலைவாய்ப்பு தொடர்பாக வரும் தகவல்களை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளங்களில் சென்று உண்மைத்தன்மையை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
(வெளியேற வழி காண்போம்)