

யூடியூப்பின் கனவுத்திரை! - யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக் களுக்கான கனவுத்திரை (Dream Screen) வசதியைக் கொண்டு இனி வீடியோ பின்னணிகளையும் உருவாக்கலாம். இதுவரை இந்த வசதி மூலம் ஏஐ துணை கொண்டு பின்னணி உருவங்களை மட்டுமே உருவாக்க முடியும் வகையில் இருந்தது. தற்போது கூகுள் டீப்மைண்டின் வீடியோ உருவாக்க சேவையான வியோ துணையோடு, பின்னணி வீடியோக்களையும் உருவாக்கி கொள்ளலாம் என யூடியூப் அறிவித்துள்ளது.
எழுத்து வடிவில் கோரிக்கை வைத்து, பொருத்தமான அனிமேஷன் வகையை தேர்வு செய்து பின்னணி வீடியோக்களை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பயனாளிகள் தங்களை புத்தகங்கள் சூழ்ந்த சூழலில் இருப்பதுபோல் அல்லது ஷார்ட்ஸ் வீடியோவுக்கான அனிமேஷன் தொடக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். ஷார்ட்ஸ் கேமரா வசதியில் சென்று கனவுத்திரை வசதியை அணுகலாம். முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் இது அறிமுகமாகிறது.
வாட்ஸ் அப்பில் புதிய வசதி: வாட்ஸ் அப்பில் குரல் வழி சேவையில் செய்திகள் அனுப்பலாம். டைப் செய்வதைவிட, குரல் வழி செய்திகள் ஏற்றது எனப் பலர் கருதலாம். ஆனால் சில நேரம், குரல் செய்திகளைக் கேட்பது சிக்கலாகலாம். அல்லது வேறு காரணங்களுக்காக குரல் செய்திகளை எழுத்து வடிவில் அணுக நினைக்கலாம். இதற்கு வழி செய்யும் வகையில் வாட்ஸ் அப்பில், குரல் செய்திகளை எழுத்து வடிவில் மொழியாக்கம் செய்து தரும் வசதி அறிமுகமாகிறது.
சாட் பகுதிக்கு சென்று, வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என அடித்து இந்த வசதியைப் பெறலாம். பின்னர் தேவையான தருணங்களில், ஆடியோ செய்தியைத் தொடர்ந்து அழுத்தி இந்த வசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் முதலில் அறிமுகமாகிறது. பயனாளிகளின் திறன்பேசியிலேயே இந்த மாற்றம் நிகழ்வதால், செய்திகளை வேறு யாரும் வாசிக்க வாய்ப்பில்லை என்றும் வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.
பேஸ்புக் கண்காணிப்பு: பேஸ்புக் பயனாளியாக நீங்கள் எந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா என கேட்டு, ஐந்து முக்கிய அம்சங்களை மேக்யூஸ் ஆப் (https://www.makeuseof.com/) தளம் பட்டியலிட்டிருக்கிறது. முதல் நிபந்தனை, பயனாளிகளின் இருப்பிடத்தை பேஸ்புக்கால் பின்தொடர முடியும். ஜிபிஎஸ் இல்லாவிட்டாலும்கூட, புளுடூத், வைபை போன்ற மாற்று வழிகளில் பேஸ்புக் இதைச் செய்யும்.
பயனாளிகள் உள்ளடக்கத்தை பேஸ்புக் விரும்பிய வகையில் பயன்படுத்தும். உள்ளடக்கம் கொண்டு ஏஐ நுட்பத்திற்கு பயிற்சி அளிக்கும். பயனாளிகள் டெலீட் செய்யும் உள்ளடக்கம் எதுவும் முழுமையாக அழிக்கப்படுவதில்லை மற்றும் பயனாளிகள் தரவுகளை பேஸ்புக் விளம்பர நோக்கம் உள்பட பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
உங்கள் தரவுகளை பாதுகாக்கும் வழிகள்: மடிக்கணினி, ஸ்மார்ட்போன் என நம் வசம் உள்ள சாதனங்களில் எக்கச்சக்கமான தரவுகள் இருக்கின்றன. சமூகத் தொடர்புகள், தனிப்பட்ட தகவல் தொடர்புகள், நிதித் தகவல்கள், ஆவணங்கள், ஒளிப்படங்கள் உள்ளிட்டவை கொண்ட இந்தத் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கான வழிகளை விரிவாக விளக்குகிறது இணையத் தனியுரிமை பாதுகாப்பு அமைப்பான இ.எப்.எப்.இன் இணையதளம். இந்தத் தளம், இணையவழிக் கண்காணிப்புக்கு எதிரான பாதுகாப்பு வழிகளையும் விரிவாக விளக்குகிறது. பல்வேறு பகுதிகளை கொண்ட இந்த இணையதளத்தைத் தனியுரிமை பாதுகாப்பு பொக்கிஷம் எனலாம்: https://ssd.eff.org/
ஓபராவில் ஸ்பாட்டிபை: தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் ஓபரா பிரவுசர் இப்போது ஸ்டிரீமிங் சேவை ஸ்பாட்டிபையுடன் கைகோத்துள்ளது. இதன் பயனாக ஓபரா ஒன் பிரவுசரில் இனி, ஸ்பாட்டிபை பிளேயரைப் பெறலாம். பிரவுசரின் இடப்பக்க தூணில் இருக்கும் ஸ்பாட்டிபை பிளேயரை, அங்கிருந்து திரையில் வேறு எந்த இடத்திற்கும் நகர்த்திக்கொள்ளலாம்.
இசை தவிர, பாட்காஸ்டிங், ஆடியோ புத்தகங்கள் என விரிவாக்கத்தில் ஸ்பாட்டிபை கவனம் செலுத்தும் நிலையில், ஓபரா பயனாளிகள் இந்த இசை கேட்பு சேவையை எளிதாக அணுகலாம். ஓபரா ஒன் பிரவுசரில், அரியா (Aria) ஏஐ சேவை மூலம், இணைய கட்டுரைகளின் சுருக்கங்களைப் பெறுவது, அலசுவது உள்ளிட்ட வசதிகளை அணுகலாம்.
- enarasimhan@gmail.com