உங்கள் திறன்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டால்… | மாய வலை

உங்கள் திறன்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டால்… | மாய வலை
Updated on
2 min read

கோவையைச் சேர்ந்த ரம்யாவின் 10 வயது மகன், அம்மாவின் திறன்பேசியில் கேம்ஸ் விளையாடுவது வழக்கம். அன்று ஒருநாள் புதிதாக கால்குலேட்டரைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவிட்டு, அம்மாவிடம் கொடுத்துவிட்டான். அன்று இரவு ரம்யாவுக்கு புதிது புதிதாக மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

முன்பின் தெரியாதவர்களுக்கு அவர் பெயரில் மின்னஞ்சல்கள் சென்றும் இருந்தன. குழம்பிபோன அவர், மின்னஞ்சல் கணக்கை மூடி வெறியேறியிருக்கிறார். தன்னுடைய கணவருடைய திறன்பேசியை வாங்கி பரிசோதித்தபோது, ரம்யா இன்னும் ஆன்லைனில் இருப்பதுபோலவே காட்டி யிருக்கிறது.

மின்னஞ்சல் கணக்கிலிருந்து வெளியேறிய பிறகும் எப்படி ஆன்லைன் என்று காட்டுகிறது என்று ரம்யாவுக்குக் குழப்பம். ஒருவேளை தன் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்று சந்தேகம். திறன்பேசியை ஆராய்ந்தபோது புதிதாகப் பதிவிறக்கமான கால்குலேட்டர் வழியாக ஹேக் செய்யப்பட்டதை அறிந்தார்.

அதை உடனே ‘டெலிட்’ செய்துவிட்டார். அவரால் கொஞ்சம் ஊகிக்க முடிந்ததால், ஹேக் செய்யப்பட்டதை அறிந்துக்கொண்டார். ஆனால், பெரும்பாலானோருக்கு திறன்பேசி ஹேக் செய்யப்பட்டால், அதைப் பற்றி எதுவும் தெரியாமலே இருக்கும். அதன்வழியே ஏதாவது வில்லங்கமோ சிக்கலோ வந்தால்தான் உணர்வார்கள். ஆனால், திறன்பேசி ஹேக் செய்யப்பட்டால், சில அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்.

எப்படிக் கண்டறிவது? - வழக்கத்துக்கு மாறாக திறன்பேசியில் பேட்டரியின் திறன் வேகமாகக் குறைந்தாலோ, திடீரென திறன்பேசி அதிக சூடாக இருந்தாலோ யாரோ ‘ஹேக்’ செய்து நம் திறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்தாத நிலையில், மொபைல் டேட்டா வேகமாகக் குறைகிறது என்றாலும், திறன்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டிருக்கலாம்.

திறன்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது ‘கிராஸ் ஸ்டாக்’ போல வித்தியாசமாக உணர்ந்தால், யாரோ நம் திறன்பேசியை ஒட்டுக்கேட்கிறார்கள் அல்லது பதிவுசெய்கிறார்கள் என்று அர்த்தம். சில நேரம் திறன்பேசியில் மூழ்கியிருக்கும்போது ‘பாப் அப்’ விளம்பரங்கள் அதிகமாகத் தோன்றக்கூடும். குறிப்பாக ஆபாசமான விளம்பரங்கள் பளிச்சிடும். இதுபோன்ற ‘பாப் அப்’ விளம்பரங்களை ‘கிளிக்’ செய்தால் அதன் வழியே ‘மால்வேர்’ பதிவிறக்கம் ஆக வாய்ப்புண்டு.

இதன் வழியாகவும் திறன்பேசி ஹேக் செய்யப் படலாம். இதுபோன்ற தனிநபர்களின் திறன்பேசி ‘ஹேக்’ செய்யப்படும்போது, நம்முடைய தகவல்களை மோசடிக்காரர்கள் திருடக்கூடும். அதன் வழியாக சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்யக்கூடும்.

மின்னஞ்சலுக்கு வரும் ‘ஓடிபி’யை பயன்படுத்தி நம் கணக்கில் உள்ள பணத்தைக்கூட அடித்துவிடுவார்கள். எனவே, திறன்பேசியில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒன்றை எதிர்கொண்டாலும், திறன்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டும்.

எப்படி தப்பிப்பது? - இதிலிருந்து தப்பிக்க, முதலில் உங்களுக்குத் தெரியாமல் திறன்பேசியில் ஏதாவது செயலி பதிவிறக்கம் ஆகியிருக்கிறதா என்று ஆராய வேண்டும். உங்களுக்குத் தெரியாமலோ, வேறு ஏதாவது இணையதளத்தில் இருக்கும்போது தெரியாமல் கைபட்டோ அல்லது வீட்டில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கோ செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கலாம்.

அதில் திறன்பேசியை அணுக எல்லையில்லா அனுமதியைக் வழங்கியிருக்கக்கூடும். ஒரு திறன்பேசியை வாங்கும்போதே இருந்த செயலிகள் என்றாலும்கூட, அந்தச் செயலிகளைக் கவனமாக ஆராய வேண்டும். தேவையில்லாத செயலிகள் என்றால் நீக்கிவிட வேண்டும். உங்கள் திறன்பேசியில் இதுவரை பார்த்திராத செயலி இருந்தால், அது பிரச்சினைக்குரியதாக இருக்கக்கூடும். அதை ‘டெலிட்’ செய்துவிட வேண்டும்.

திறன்பேசியில் ஆராய்ந்தும் எதையும் கண்டறிய முடியாவிட்டால், எந்தெந்தச் செயலிகள் பேட்டரி திறனில் பெரும் பகுதியையும் அதிகப்படியான டேட்டாவையும் விழுங்குகின்றன என்பதை ‘செட்டிங்’கில் சென்று பார்வையிடுங்கள். அதன்மூலமும் ‘ஹேக்கிங்’கிற்கு காரணமான செயலியைக் கண்டறியலாம். இப்படியெல்லாம் செய்தும்கூட, சந்தேகம் தீரவில்லை என்றால், உங்கள் திறன்பேசியை ‘ரீசெட்’ செய்துவிடுங்கள்.

அதற்கு முன்பாக உங்கள் திறன்பேசியில் உள்ள ‘டேட்டா’வை ‘காப்பி’ செய்துகொள்ளுங்கள். ‘ரீசெட்’ செய்யும்போது நமக்கே தெரியாமல் திறன்பேசியில் ஏதேனும் பதிவிறக்கம் ஆகியிருந்தால், அவை தானாக ‘டெலிட்’ ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் திறன்பேசியை இயக்கும்போது எல்லாவற்றுக்கும் ‘பாஸ் கோட்’ கொடுத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ். வழியாக வரும் எந்த ‘லிங்கு’களையும் ‘கிளிக்’ செய்ய வேண்டாம்.

(வெளியேற வழி காண்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in