

தெலங்கானாவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குமார், கரோனா காலத்தில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினார். ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து பங்குகளை வாங்கினார். பங்குச் சந்தை வர்த்தகத்தின் அடிப்படைகளைப் பெரிதாகத் தெரிந்துகொள்ளாமலே, மற்றவர்களைப் பார்த்து இந்த வர்த்தகத்தில் இறங்கினார். அவ்வப்போது சிறிது லாபமும், பெரிய நஷ்டமும் கிடைத்தன. என்றாலும் அவர் விடவில்லை.
ஒரு நாள் குமாருடைய கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இருப்பவர்கள், பங்குகள் வாங்குவது, விற்பது, எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழுவில் தான் நான்கு ஆண்டுகளாக நஷ்டம் அடைந்துவருவதைப் பற்றிக் குறைப்பட்டு குமார் பதிவிட்டார்.
உடனே அவரை ஒரு பெண் வாட்ஸ்அப்பில் தனியாக அழைத்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கியிருக்கிறார். பங்குச் சந்தையில் அதிகப் பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதாகக் கூறியிருக்கிறார். ஒரு லிங்கை அனுப்பி, அதன் வழியாக செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லியிருக்கிறார்.
அதன்படியே செய்த குமாரிடம், முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து பங்குகள் வாங்கச் சொல்லியிருக்கிறார், நேரில் பார்க்காமல் பணம் செலுத்தலாமா என்று குமாருக்குச் சின்ன சந்தேகம். இறுதியாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய குமார் முன்வந்தார்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஒரு நிறுவனத்தின் பங்கை அந்தப் பெண் வாங்கச் சொல்கிறார். அடுத்த நாள் காலையில் விற்கச் சொல்கிறார். எடுத்த எடுப்பிலேயே ரூ.10 ஆயிரம் போட்டவருக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கிறது. அடுத்தடுத்த நாள்களிலும் குமாருக்கு இப்படி லாபம் கிடைக்கிறது.
இப்படியாக 5 நாள்கள் சென்றன. அந்தப் பெண் வாட்ஸ்அப்பில் அழைக்கிறார். ஒரு நிறுவனத்தின் ஐபிஓ வருகிறது என்று வலைவிரிக்கிறார். (ஐபிஓ என்பது ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபர்' (ஆரம்பப் பொது வழங்கல் - வணிகங்கள், மூலதனம் திரட்டவும், வணிக விரிவாக்கத்துக்காக நிதி திரட்டவும் தேர்ந்தெடுக்கும் ஒரு வழியின் பகுதி.) அதன்மூலம் பங்குகள் கிடைத்தால், நிறைய லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார் அந்தப் பெண். ஏற்கெனவே பங்குகள் வாங்கி நஷ்டத்தில் உள்ளவற்றை விற்று, இதில் முதலீடு செய்யும்படி கூறுகிறார். அதன்படி முதலில் ஒரு லட்சத்தை குமார் செலுத்துகிறார்.
இரண்டு நாள்களில் ஐபிஓ மூலம் அவருக்குப் பங்குகள் கிடைத்துவிட்டதாகக் கூறி அவர் செலுத்திய ஒரு லட்சம் அவருடைய கணக்கிலிருந்து எடுக்கப்படுகிறது. மேலும் ரூ. 4 லட்சம் செலுத்தினால், ஐபிஓ செயல்முறை முடிந்துவிடும் என்று அப்பெண் கூறியிருக்கிறார்.
தன்னிடம் ரூ.4 லட்சம் இல்லை என்று மறுத்திருக்கிறார் குமார். ‘அதைக் கொடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்கள் மீது சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும். அப்போது நீங்கள் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும்’ என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் குமார் தான் சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்தார்.
தான் இதிலிருந்து விலகிக் கொள்வதாகவும், சேவைக் கட்டணத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய ரூ.1 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கும்படியும் அப்பெண்ணிடம் குமார் கேட்டிருக்கிறார். அதை மறுத்த அப்பெண், மேலும் ரூ.4 லட்சம் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த குமார், தெலங்கானா சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார். இப்போது காவல்துறை நடவடிக்கைக்காகக் குமார் காத்திருக்கிறார். இது ஓர் உதாரணம்தான். பங்குச் சந்தையில் பணம் பார்க்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக அணுகுவோர் லட்சம், கோடி எனச் சுருட்டியிருக்கிறார்கள்.
இங்கே குமார் செய்த தவறு என்ன? முதலில் எதுவும் தெரியாமல் அரைகுறையாகப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதே குமார் செய்த பெரிய தவறு. அதேபோல், வாட்ஸ்அப்பில் மட்டுமே அழைக்கும் பெண்ணை நம்பி, அவர் பிரத்யேகமாக அனுப்பிய லிங்க் மூலம் செயலியைப் பதிவிறக்கம் செய்தது இன்னொரு தவறு. பங்குச் சந்தையில் ‘டிமேட்’ என்கிற எண் இல்லாமல் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது.
அந்த டிமேட் எண்ணை இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) அங்கீகரிக்கும் முகவர் நிறுவனங்கள் மூலமே பெற முடியும். அவர்களின் செயலி வழியாக மட்டுமே ஐபிஓவுக்கும் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இங்கு குமாரை ஐபிஓ மூலம் பங்குகள் கிடைத்துவிட்டது என்று ஏமாற்றி மேலும் ரூ.4 லட்சம் கேட்டிருக்கிறார்கள்.
இன்று பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களைக் குறிவைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் வலை விரிக்கப்படுகிறது. உஷாராக இருப்பது அவரவர் பாக்கெட்டுக்கு நல்லது.
(வெளியேற வழி காண்போம்)