

இணைய உலகின் இந்த வார முக்கிய செய்தி, சாட்ஜிபிடி அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சாட்ஜிபிடிசர்ச்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஜிபிடி பிளஸ் உள்ளிட்ட பயனாளிகளுக்காக முதல் கட்டமாக அறிமுகம் ஆகியுள்ள இந்தச் சேவை பற்றிய விரிவான விளக்கமும் அளித்துள்ளது: https://openai.com/index/introducing-chatgpt-search/ பரவலாக சொல்லப்படுவதுபோல, ஜிபிடிசர்ச், கூகுள் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன், சாட்.காம் (chat.com) இணைய முகவரியை வாங்கியிருக்கிறார். இனி சாட்.காம் என டைப் செய்தாலும், தேடினாலும், சாட்ஜிபிடிக்குதான் கொண்டு செல்லும். கூகுளுக்கு போட்டியானது என்று சொல்லப்பட்டாலும், கூகுள் தேடலில் பயன்பெறும் உத்திதான் இது!
* வாட்ஸ் அப் ஆய்வு: வாட்ஸ் அப் பல்கலைக் கழகத்தில்(!) பரவும் பொய்ச் செய்திகளை நம்பி ஏமாறுவது இனி ஓரளவு குறையலாம். ஏனெனில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் எந்த ஒரு ஒளிப்படத்தையும் தேடிப்பார்க்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கூகுளின் அதேபோன்ற படத் தேடல் (Reverse image search) போலவே செயல்படும் இந்த தேடல் மூலம், ஒளிப்படத்தின் நம்பகத்தன்மை தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ளலாம். வாட்ஸ் அப்பில் தினமும் 700 கோடிப் படங்கள் பகிரப்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக இணையத்தில் அதேபோன்ற படத் தேடலில் ஈடுபட: https://tineye.com/
* சமூக ஊடக தடை: 16 வயதுக்கு உட்பட்ட வர்கள் சமூக ஊடக சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டுவர உள்ளது. பெற்றோர் அனுமதியும் இதற்கு விதிவிலக்காக அமையாது, ஏற்கெனவே உள்ள சமூக ஊடக கணக்குகளுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகம் தொடர்பான மிக கண்டிப்பான சட்டம் இது என வர்ணிக்கப்படும் நிலையில், இதை செயல்படுத்த 16 வயதுக்கு உட்பட்டவர்களை அடையாளம் கண்டு விலக்குவதற்கான தொழில்நுட்பம் தற்போது பரிசோதிக்கப் பட்டு வருகிறது. ‘சமூக ஊடகம் நம் குழந்தைகளுக்கு தீங்கிழைக்கிறது. அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது’ என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் கூறியுள்ளார். புதிய சட்டத்திற்கு எதிர்கட்சி ஆதரவும் இருக்கிறது.
* திகில் படத்திற்கு சிரிப்பு சோதனை: வசூலில் சாதனை படைத்த ‘ஸ்மைல்’ திகில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. ஸ்மைல் 2 படத்தின் முதல் ஏழு நிமிடங்களை ரசிகர்கள் ஆன்லைனில் இலவசமாக பார்க்க, ஒரு விநோத நிபந்தனையுடன் தயாரிப்பு நிறுவனம் பாரமவுண்ட் வழிசெய்திருக்கிறது. அந்த இணையவழி விளையாட்டை பார்த்து ஏழு நிமிடமும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிரிப்பதை நிறுத்தினால் படமும் நின்று விடும். விநோத நிபந்தனைதான்!
* வானிலை அறிய புதிய வழி - ‘மைன்கிராப்ட்’ ஒரு வீடியோ கேம் என்றாலும், அது ஓர் தனி உலகம். அதில் பயிர் வளர்க்கலாம். சர்வாதிகார ஆட்சியின் தணிக்கையில் இருந்து தப்பிக்கும் இணைய நூலகத்தை நடத்தலாம். மைன்கிராப்டிற்கு என்று தனி வானிலையும் இருக்கிறது. இப்போது, மைன்கிராப்ட் மெய்நிகர் உலகில், நம் பூவுலகின் வானிலையைத் தெரிந்துகொள்ள உதவும் நீட்டிப்பு சேவை குரோம் பிரவுசருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: https://www.producthunt.com/posts/mineweather
- சைபர்சிம்மன் - இதழாளர், தொழில்நுட்ப வலைப் பதிவாளர், கவுரவ விரிவுரையாளர். தொழில்நுட்பம், இணையம், மென் பொருள், சமூக ஊடகம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன ஊடகம் தொடர்பாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக எழுதிவருபவர். அதை வழக்கமான பாணியில் இருந்து விலகி நின்று வரலாற்று நோக்கிலும், கலாச்சார, சமூக அம்சங்கள் சார்ந்தும் கவனம் செலுத்திவருகிறார். தொடர்புக்கு - enarasimhan@gmail.com