இளமை .நெட்: மின்னஞ்சல் விற்பனையைத் தடுக்கும் வழி!

இளமை .நெட்: மின்னஞ்சல் விற்பனையைத் தடுக்கும் வழி!
Updated on
2 min read

வீட்டில் சேரும் குப்பைகளைவிட உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் அதிகக் குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறியாமலே இருக்கலாம் அல்லது அறிந்தும் செய்வது அறியாமல் விழித்துக்கொண்டிருக்கலாம். ‘ஸ்பேம்’ எனப்படும் அழையா விருந்தாளியாக வரும் குப்பை மின்னஞ்சல்களால்தான் இந்த நிலை!

இது மின்னஞ்சலின் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் பிரச்சனைதான். ஆனால், இன்னமும் அதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கான எளிய வழி என்பதால், விளம்பர வலை விரிக்கும் இமெயிலை பல நிறுவனங்கள் அனுப்பிவைக்கின்றன. முன்பின் தெரியாத நிறுவனங்களும் மோசடிப் பேர்வழிகளும்கூட இவ்வாறு செய்வதுண்டு.

அறிமுகம் இல்லாத மின்னஞ்சல்கள் அல்லது வேண்டாத மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை நிரப்பும்போது, இவர்களுக்கு நம் மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது எனும் கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். பலவிதங்களில் நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை அறுவடை செய்கின்றன. ஏதாவது ஒரு செய்தி சேவையில் நீங்கள் உறுப்பினராகச் சேர்ந்திருக்கலாம் அல்லது நிறுவன மெயில்களுக்கு பதில் அளிக்கும்போது உங்கள் முகவரியை சமர்பித்திருக்கலாம். உங்களை அறியாமல் பொதுவெளியில் மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்திருக்கலாம்.

இப்படி பலவழிகளில் மின்னஞ்சல் முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. தவிர ‘ஹேக்கர்கள்’ கைவரிசைக் காட்டி முகவரிகளை களவாடிச் சென்றிருக்கலாம். மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை விற்பனை செய்திருக்கலாம். ஆம், மின்னஞ்சல் முகவரியை அறுவடை செய்து வர்த்தக நிறுவனங்களிடம் விற்பனை செய்வதையே வர்த்தகமாக மேற்கொள்ளும் நிறுவனங்களும் இருக்கின்றன. சொல்லப்போனால் இணையத்தில் மின்னஞ்சல் முகவரிகளுக்கு வலைவீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வலையில் சிக்கும் மின்னஞ்சல்கள் கொத்துகொத்தாக விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்பேம் மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸில் குவிய இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்தப் பின்னணியில், மின்னஞ்சல் முகவரி விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ளது ‘ஹேவ் ஐ பீன் சோல்ட்’ (https://haveibeensold.app/ ) என்ற இணையதளம்.இந்தத் தளத்தில் மின்னஞ்சல் முகவரியைச் சமர்பித்தால், அந்த முகவரி விற்பனை செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து சொல்கிறது. அதாவது, வர்த்தக நோக்கில் விற்பனை செய்யப்பட்ட மின்னஞ்சல் பட்டியல்களில் சமர்பிக்கப்பட்ட முகவரி இருக்கிறதா எனத் தேடிப்பார்த்து தகவல் அளிக்கிறது.

மின்னஞ்சல் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்தச் சேவை மூலம் மின்னஞ்சல் நிலையை அறிந்துகொள்ளலாம். ஆனால், தற்போது இந்தத் தளத்தின் வசம் பெரிய அளவில் தரவுகள் பட்டியல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் சமர்பிக்கப்படும் மின்னஞ்சல் முகவரி அல்லது வேறு எந்த விவரங்களையும் சேகரிப்பதில்லை என இந்தத் தளம் உறுதியளிக்கிறது. மின்னஞ்சல் முகவரியைச் சோதித்து பார்த்தபிறகு அந்த முகவரியை நீக்கிவிடுவதற்கான வாய்ப்பையும் இந்தத் தளம் அளிக்கிறது. இந்தத் தளத்தின் மீது நம்பிக்கை வைத்து, மின்னஞ்சல் முகவரியைச் சமர்பித்து, எதிர்காலத்தில் அந்த முகவரி விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து எச்சரிக்கும் மின்னஞ்சலையும் பெற ஒப்புக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது.

பயனாளிகளின் தரவுகளை பாதுகாப்பதற்கான ஜி.டி.பி.ஆர். சட்டம் ஐரோப்பிய நாடுகளில் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்தை மீறி நடக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து புகார் செய்யவும் இந்தத் தளம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஸ்பேம்’ மின்னஞ்சல்களிலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகளையும் இந்தத் தளம் பட்டியலிட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://neighbourly.google.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in